சொதப்பிய இங்கிலாந்து.. முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்.. அசத்திய ஆஸ்திரேலியா!

லண்டன்: ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான சதத்தால் 416 ரன்களை குவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இரண்டாவது நாளில் பேஸ் பால் திட்டத்தால் ஆஸி. அணி பந்துவீச்சை சிதறடித்தது.
188 ரன்களுக்கு வெறும் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி வந்த நிலையில், போப், டெக்கெட் மற்றும் ரூட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 2ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் மூன்றாம் நாளில் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து 2ஆம் நாளில் சிறப்பாக ஆடியப் ஹாரி ப்ரூக், 3ஆம் நாளில் அரைசதம் கடந்தார். ஆனால் அரைசதம் அடித்த சில பந்துகளிலேயே ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பேர்ஸ்டோவ் 16 ரன்களிலும், பிராட் 12 ரன்களிலும், ராபின்சன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல் நேதன் லயன் இல்லாததால், டிராவிஸ் ஹெட்டை வைத்தே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அதேபோல் ஆஸி. அணியின் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3ஆம் நாள் முதல் செஷனில் வெறும் 47 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டாகியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களை முன்னிலையாக பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 3 நாட்கள் மீதமிருக்கும் சூழலில் நாளை மாலை வரை ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து பிரம்மாண்ட இலக்கை நிர்ணயிக்கும் என்று பார்க்கப்படுகிறது.