கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு.. ஓய்வை அறிவிக்கும் தினேஷ் கார்த்திக்?

Representative Image. Representative Image.

By Sekar Published: November 24, 2022 & 17:58 [IST]

Share

Dinesh Karthik Retirement : இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக்கின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு கிரிக்கெட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த பெரிய குறிப்பை தினேஷ் கார்த்திக் சூசகமாக கூறியுள்ளார் என்றே இந்த பதிவின் மூலம் நம்புகின்றனர். 

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு கார்த்திக்கின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் 2022 ஐபிஎல் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டார்.

ஐபிஎல்லில் அபார செயல்பாட்டுக்கு பிறகு, அவர் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டார். இந்திய அணிக்காக தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாகவே செயல்பட்டார். அவர் டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்று போட்டிகளில் பலவற்றை விளையாடினார். ஆனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் வீடியோ தொகுப்பை வெளியிட்டார். அதில் அவரது குடும்பத்தினர் மற்றும் அணியினர் இடம்பெற்றுள்ளனர்.

"இந்தியாவுக்கான உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றது மிகவும் பெருமையான உணர்வு. அதில் நாங்கள் இறுதி நோக்கத்தை இழந்துவிட்டோம், ஆனால் அது என் வாழ்க்கையை பல நினைவுகளால் நிரப்பியது. எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் மிக முக்கியமாக ரசிகர்களுக்கு தீராத ஆதரவிற்கு நன்றி. #DreamsDoComeTrue #T20WorldCup" என்று தினேஷ் கார்த்திக் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆறு ரன்கள் மட்டும் எடுத்தார். அவர் தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

அடுத்த 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கே வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படும் நிலையில், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதி. இதனால் அவர் விரைவில் ஓய்வை அறிவித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக இந்த பதிவு இருப்பதாக ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக, தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு அரை சதத்துடன் 686 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில், கார்த்திக் 94 ஆட்டங்களில் விளையாடி, ஒன்பது அரைசதங்களுடன் 1,752 ரன்கள் குவித்துள்ளார். அவர் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 7 அரை சதங்களுடன் 1,025 ரன்கள் எடுத்துள்ளார்.