இந்திய கிரிக்கெட் அணிக்கு அஸ்வினை கேப்டனாக்குங்க - தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்!

ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதிவரை சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இம்முறை கிரிக்கெட் தொடரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் 2010, 2014ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் கிரிக்கெட் தொடர் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்திய அணி களமிறங்கவில்லை.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஆடவர், மகளிர் ஆகிய இரண்டு அணிகளும் களமிறங்கவுள்ளன. மகளிர் அணியில் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. ஆனால், இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் இடம்பெற வாய்ப்பில்லையாம். அடுத்து, ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவிருப்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இரண்டாம் தர அணி வீரர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ஐபிஎல் 16ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட இளம் இந்திய வீரர்களான ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, திலக் வர்மா போன்றவர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணியை வழிநடத்த அனுபவம் வாய்ந்த வீரர் தேவை. இதனால், ஷிகர் தவனை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், உம்ரான் மாலிக் போன்றவர்களும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோல், ராகுல் டிராவிட்டும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது பிசியாக இருப்பார் என்பதால், அவருக்கு மாற்றாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ். லட்சுமணன் பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் சென்னையில் பேட்டியளித்துள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியின் பி டீம் அனுப்பப்பட்டால், அஸ்வினையே கேப்டனாக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி வருவதாகவும் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.