WPL 2023 : உ.பி. வாரியர்ஸ் அணியின் போராட்டம் வீண்..!! டெல்லி அணியின் ஆதிக்கம் தொடர்கிறது..!!

இந்திய மண்ணில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 5வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் உ.பி. வாரியர்ஸ் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மேலும் ஒரு இமாலய இலக்கை எட்டும் போட்டியாக இந்த போட்டி பதிவானது, டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்த உ.பி. வாரியர்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிதறடித்தார்கள். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லானிங் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்து அசத்தினார், குறிப்பாக 70(42) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் பெற திணறிய நிலையில், இறுதியாக ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34*(22) மற்றும் ஜெஸ் ஜோனாசென் 42*(20) இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 211 ரன்கள் பதிவு செய்தது.
இந்நிலையில் 212 என்ற இமாலய இலக்கை அடைய பேட்டிங் செய்ய தொடங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி ஆரம்பம் முதலே சொதப்பிய நிலையில் உடனுக்குடன் விக்கெட்களை இழந்தார்கள். அதன்பின் போட்டியின் மத்தியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தஹ்லியா மெக்ராத் 90*(50) ரன்கள் பெற்றார். இறுதிவரை போராடிய மெக்ராத் உடைய முயற்சி பலனளிக்காத நிலையில் 20 ஓவர்கள் முடிவில் உ.பி.வாரியர்ஸ் அணி 169 ரன்கள் மட்டுமே பதிவு செய்தது.
இந்த போட்டியின் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது, டெல்லி அணி சார்பில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெஸ் ஜோனாசென் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி தொடரில் தோல்வியே பெறாமல் புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், முதல் தோல்வியை பெற்று உ.பி.வாரியர்ஸ் அணி 3 வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.