பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற CSK...உச்சகட்ட பரபரப்பான போட்டி | CSK vs DC IPL 2023 Match Highlights

மே 20 ஆம் தேதி அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 67வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்:
இந்த போட்டி சென்னை அணியின் தலையெழுத்தை தீர்மானிக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலாக இருந்தனர். அவர்களுக்கு செம்ம விருந்து அளிக்கும் வகையில் சென்னை அணி சிக்ஸ், பௌண்டரி என்று மாறி மாறி வெளுத்து வாங்கியது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே அதிக ரன்களை அடித்து குவித்தனர். ருதுராஜ் கெய்க்வாட் (79), டெவோன் கான்வே (87) மற்றும் சிவம் துபே (22) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் முடிவில் களமிறங்கிய எம்.எஸ் தோனி (5) மற்றும் ரவீந்திர ஜடேஜா (20) ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ்.
டெல்லி கேபிட்டல்ஸ் பேட்டிங்:
மிகவும் கடினமான இலக்கை அடைய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். 2வது ஓவரில் பிருத்வி ஷா (5) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பில் சால்ட் (3), ரிலீ ரோஸ்ஸௌ (0), யாஷ் துல் (13), அக்சர் படேல் (15), அமன் ஹக்கிம் கான் (7), லலித் யாதவ் (6), குல்தீப் யாதவ் (0) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அன்ரிச் நார்ட்ஜே (0) மற்றும் சேதன் சகாரியா (0) ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் போட்டி நிறைவு பெற்றது. இதில் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் (86) தனியாக நின்று அணியின் வெற்றிக்காக பாடுபட்டார். 20 ஓவர் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று Play-Off சுற்றுக்கு தகுதி பெற்றது.