ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மறக்க முடியாத தருணங்கள்.. !! | csk vs mi greatest clash in ipl history

ஐபிஎல் தொடரில் நடைபெறும் ஒரு சில போட்டிகளுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறும் போட்டிகளை காண தனி ரசிகர்கள் படை உள்ளது என்று கூறினால் மிகையில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற மறக்க முடியாத தருணங்கள் குறித்து காண்போம்.
ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டங்களை வென்று சென்னை மற்றும் மும்பை அணிகள் முக்கிய அணியாக வலம் வருகிறார்கள், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளார்கள்.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டிகள் விவரம் :
மொத்த போட்டிகள் |
37 |
சென்னை அணியின் வெற்றிகள் |
16 |
மும்பை அணியின் வெற்றிகள் |
21 |
டிராவில் முடிந்த போட்டிகள் |
0 |
ரத்தான போட்டிகள் |
0 |
சுரேஷ் ரெய்னா உடைய அதிரடி (2010) :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் முன்னணி முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது அதிரடி ஆட்டத்தை என்றும் மறக்க முடியாது.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுரேஷ் ரெய்னா மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி 57*(35) ரன்கள் பெற்று அசத்தினார், இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில் ரெய்னா உதவியுடன் 168 ரன்கள் குவித்தனர்.
அதன்பின் களமிறங்கிய மும்பை அணி 146 ரன்கள் மட்டுமே பெற்றது, அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 48 ரன்கள் பெற்றார். இந்த போட்டியில் ரெய்னா பேட்டிங்கில் அதிரடி வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் பவுலிங் செய்து ஒரு விக்கெட்டை பெற்றார். சென்னை அணிக்கு ரெய்னா பெற்று தந்த வெற்றிகள் எண்ணில் அடங்காதவை என்று கூறினால் மிகையில்லை.
ஹர்பஜன் சிங் மிரட்டல் பவுலிங் (2011) :
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் 2011 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் அசத்தல் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் 18 ரன்கள் வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், குறிப்பாக சென்னை அணிக்கு 165 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்ட நிலையில் ஹர்பஜன் சிங் தனது சூழலில் ரெய்னா, ஸ்ரீகாந்த் அனிரூதா, ஆல்பி மோர்கெல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜோகிந்தர் சர்மா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 159 ரன்கள் பெற்று அந்த போட்டியில் தோல்வியை தழுவியது , இந்த சம்பவம் இன்று வரை மறக்க முடியாத ஒன்றாக அமைத்துள்ளதற்கு முக்கிய காரணமாக ஹர்பஜன் சிங் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொல்லார்ட் செய்த சம்பவம் (2021) :
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கிய கிரோன் பொல்லார்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான பேட்டிங் ரெக்கார்டு வைத்துள்ளார், குறிப்பாக 2013 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல பொலார்ட் அடித்த 60*(32) ரன்கள் முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் 2021 ஆம் ஆண்டு தொடரில் நடைபெற்ற சம்பவத்தை சென்னை மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது என்று கூறலாம். மும்பை அணிக்கு 219 ரன்கள் இலக்காக சென்னை அணி சார்பில் அளிக்கப்பட்டது, இந்த போட்டியில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தவித்த நிலையில் களமிறங்கிய பொல்லார்ட் 87*(34) ரன்கள் அடித்து மும்பை அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லுங்கி இங்கிடி வீசிய பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து அதிரடி வெற்றியை மும்பை அணிக்கு அளித்தார், இது சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடிய போட்டிகளில் முக்கிய தருணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தல தோனியின் தரமான செய்கை (2012) :
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பல போட்டிகளில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார், அதில் 2012 ஆம் ஆண்டு எலிமினேட்டர் சுற்றில் அரங்கேறிய தரமான சம்பவத்தை காண்போம். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் 5வது இடத்தில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தோனி 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 51 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார், இந்த போட்டியில் தான் 112 மீட்டர் சிக்ஸர் அடித்து ஐபிஎல் அரங்கை தோனி அதிர வைத்தார். இவருடன் ஜோடி சேர்ந்த பிராவோ 33*(14) ரன்கள் பெற்ற நிலையில் சென்னை அணி 187 ரன்களை பதிவு செய்தது.
இந்நிலையில் சென்னை அணியின் அசத்தல் பவுலிங் மூலம் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் மட்டுமே பதிவு செய்த நிலையில் போட்டியில் தோல்வி உற்றது. இந்த போட்டியில் தோனி உடைய அதிரடி இன்னிங்சை இன்று வரை யாரும் மறக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறக்க முடியாத 2019 இறுதிப் போட்டி தருணம் :
சென்னை மற்றும் மும்பை அணிகள் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பலபரிச்சை மேற்கொண்டார்கள், இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பான பவுலிங் மூலம் 149 ரன்களுக்கு சுருட்டியது சென்னை அணி, அதிகபட்சமாக பொல்லார்ட் 41(25) ரன்கள் பெற்றார். சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்களையும், தாகூர் மற்றும் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை பெற்றனர்.
இந்நிலையில் எளிய இலக்கை அடைய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறிய நிலையில் இறுதிவரை ஓவர் வரை போட்டி நகர்ந்தது, பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் இறுதி ஓவரில் 9 ரன்கள் பெற்றால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற நிலையில் பந்து வீசிய அனுபவ வீரர் லசித் மலிங்க தனது யோகர்கள் மூலம் சென்னை அணி சார்பில் அதிரடியாக விளையாடி வந்த வாட்சனை கட்டுப்படுத்தினர்.
இந்த தருணத்தில் வாட்சன் 80 (59) ரன்கள் பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார், கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மலிங்க ஷர்டுல் தாகூர் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ மூலம் பெற்று மும்பை அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இன்று வரை ஐபிஎல் தொடரின் சிறந்த இறுதி போட்டியாக இந்த போட்டி தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் சிறப்பு அம்சமாக மே 6ஆம் தேதி சென்னையில் இரு அணிகளும் 2023 லீக் சுற்றில் 2வது முறையாக விளையாட உள்ள போட்டி ஐபிஎல் தொடரின் மிரட்டல் முக்கிய போட்டியாக அமையும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது .
ஐபிஎல் 2023 தொடரில் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இரு அணிகள் மோத உள்ள லீக் போட்டியை காண இரு அணிகளின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.