10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்த சென்னை.. குஜராத் டைட்டன்ஸ் ஆல் அவுட்.. | CSK vs GT Qualifier 1 IPL 2023 Highlights

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் – 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக களம் கண்ட ருதுராஜ் கெய்க்வாட் - டெவன் கான்வே கூட்டணி அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தனர். முதல் 10 ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடந்த நிலையில், 36 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் அரைசதம் எடுத்த நிலையில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிக்ஸர் மன்னன் துபே ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் கான்வே 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களில் வெளியேறினார். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசிய ராயுடு 17 ரன்னில் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி களமிறங்கிய நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றார். இருந்தாலும், அந்த உற்சாகம் ரொம்ப நேரம் நீடிக்காமல் போனது. தோனி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். களத்தில் இருந்த மொயீன் அலி ஒரு சிக்ஸருடன் 9 ரன்களும், 2 பவுண்டரிகளுடன் ஜடேஜா 22 ரன்களும் குவித்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.
நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், தொடக்க வீரரான விருத்திமான் சாஹா 12 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 8 ரன்னிலும் அவுட் ஆகினார். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மான் கில், மதீஷா பத்திரனா, தசுன் ஷனகா அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுக்க, 18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 138 ரன்கள் எடுக்க, அந்த அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், எப்படியும் எடுத்துவிடலாம் என்று நம்பிக்கையோடு விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.