சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தனித்துவமான சாதனைகள் குறித்த தகவல்கள்..!! | csk unique records

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் எம்.எஸ்.தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்துள்ள தனித்துவமான முக்கிய சாதனைகள் பற்றி காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அசத்தல் ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டங்களை வென்று முன்னணி அணியாக வலம் வருகிறது. இந்த தொடரில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முக்கிய அணியாக உள்ள சென்னை அணி பல அசத்தல் சாதனைகளை ஐபிஎல் அரங்கில் பதிவு செய்துள்ளது. இந்த சாதனைகளை தொடரில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகள் முறியடிக்க நினைத்தால் கூட அவ்வளவு எளிதாக முறியடிக்க முடியாது என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சாதனை :
ஐபிஎல் தொடரில் 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்த சாதனை தொடரில் இடம்பெற்றுள்ள எந்த அணியும் நினைத்து கூட பார்க்காத அரிதான சாதனை என்று கூறினால் மிகையில்லை.
சென்னை அணி 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 4 முறை சாம்பியன் பட்டம் பெற்று 5 தோல்விகளை பெற்றுள்ளது. இதில் 3 தோல்விகள் மும்பை இந்தியன்ஸ் அணியோடு மட்டுமே கிடைத்துள்ளது, மேலும் மீதம் உள்ள இரண்டு தோல்விகள் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுடன் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளே ஆப் சுற்றில் சாதனை :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குபவர் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஏனென்றால் தனது சிறந்த கேப்டன்சி மூலம் சென்னை அணியை ஐபிஎல் தொடரில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 15 சீசனில் சென்னை அணி தொடரில் பங்கேற்காத 2016,2017 ஆம் ஆண்டுகள் மற்றும் 2020 ,2022 ஆண்டுகளை தவிர அனைத்து ஆண்டுகளிலும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டம் பெறுவதில் சாதனை :
ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் பார்த்து வியந்து நிற்கும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது, இதற்கு காரணம் சென்னை அணி ஐபிஎல் அரங்கில் படைத்துள்ள மாபெரும் சாதனைகள் தான். ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்று தனது வெற்றி பயணத்தை தொடங்கியது, அடுத்து அதே ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.மேலும் 2011ஆம் ஆண்டும் தொடர்ச்சியாக 2 வது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அந்த சாதனை இன்று வரை அனைவராலும் பார்க்கப்படும் வியப்பிற்குரிய மாபெரும் சாதனையாக உள்ளது என்று கூறினால் மிகையில்லை.