இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் : ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் இன்று தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சோபிக்க தவறியதால் புஜாரா அணியில் இருந்து தடாலடியாக கழற்றி விடப்பட்டார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உமேஷ் யாதவும் இடம்பெறவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தில் இருந்து மீளவில்லை. அதனால் இந்த தொடருக்கான இந்திய அணியில் சில புதுமுக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
புஜாராவுக்கு பதிலாக பேட்டிங்கில் 3-வது வரிசையில் ஆடுவதற்கு 'இளம் புயல்' ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இதில் 21 வயதான ஜெய்ஸ்வாலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஜெய்ஸ்வால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 625 ரன்கள் குவித்து அசத்தினார். இதே போல் டெஸ்டிலும் சக்ரவர்த்தியாக திகழுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஆவலை தூண்டியுள்ளது.
பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மிரட்டுவதற்கு காத்திருக்கிறார்கள். போதிய அனுபவம் இல்லாத முகேஷ்குமார், ஜெய்தேவ் உனட்கட், ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி ஆகியோரில் இருவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். இந்திய அணியை பொறுத்தவரை கடந்த 21 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராாக முழுமையாக கோலோச்சி வருகிறது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக எந்த ஒரு டெஸ்டிலும் தோற்றதில்லை. அதாவது 2002-ம் ஆண்டில் இருந்து இவ்விரு அணிகள் மோதிய 8 டெஸ்ட் தொடர்களையும் இந்தியாவே வசப்படுத்தியுள்ளது. அத்தகைய ஆதிக்கத்தை இந்த முறையும் இந்தியா தொடருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.