IND VS AUS TEST 2023 : செதேஷ்வர் புஜாரா 2 வது டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்லை அடைய உள்ளார்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

இந்திய மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் தூணாக விளங்கி வரும் செதேஷ்வர் புஜாரா புதிய மைல்கல்லை அடைய உள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லியில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் பலபரிச்சை நடத்த உள்ள நிலையில், இந்திய அணியின் காப்பானாக பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அனுபவ வீரர் செதேஷ்வர் புஜாரா வின் 100 வது டெஸ்ட் போட்டியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி அமையவுள்ளது.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து பல வெற்றிகளை பெற்று தந்த பெருமைக்குரிய வீரர் செதேஷ்வர் புஜாரா என்று கூறினால் மிகையில்லை.இந்த சாதனை குறித்து புஜாரா வெளியிட்டுள்ள பதிவில் கூறியது, ஆம் இந்த போட்டி எனது 100வது டெஸ்ட் போட்டி தான் ஆனால் அணிக்காக செய்ய வேண்டிய கடமை இன்னும் உள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மீதம் உள்ள டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாட போகிறேன் என்பதுதான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த தொடரின் முடிவை பொறுத்து தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் என்பதால் அதில் தான் எனது கவனம் உள்ளது என்றார்.
தனது ஓய்வு குறித்து எழுந்த கேள்விக்கு நான் இன்னும் அதை பற்றி யோசிக்கவே இல்லை என்னை பொறுத்த வரை இப்போது இந்த தருணத்தில் எது முக்கியம் அதற்கு என்ன செய்ய போகிறோம் என்று தான் யோசிப்பேன் என்று கூறினார், மேலும் இந்திய அணிக்காக ஒரு புதிய மைல்கல்லை அடைவது பெருமையாக உள்ளது என்று கூறினார்
இந்திய அணிக்காக 35 வயது மிக்க வீரர் செதேஷ்வர் புஜாரா 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில் 13 வது வீரராக இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி சார்பில் அக்டோபர் 9 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்கிய செதேஷ்வர் புஜாரா தற்போது தனது 100 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட உள்ளார், இதுவரை இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜாரா 19 சதம் மற்றும் 3 இரட்டை சதம் உட்பட 7021 ரன்களை சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.