புஜாராவுக்கு பலியாடாக மாற்றிவிட்டீர்கள்: சுனில் கவாஸ்கர் கண்டனம்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டதற்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதில் புஜாரா பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், புஜாராவை ஏன் அணியிலிருந்து நீக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் சொதப்பலுக்கும் பலியாடாக புஜாராவை மட்டும் ஏன் நீக்கினீர்கள். இந்திய கிரிக்கெட்டின் சுயநலமற்ற சேவகனாக அவர் திகழ்கிறார். இந்திய அணிக்காக பல சாதனைகளை அவர் செய்திருக்கிறார். அவருக்கு அதிக அளவில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இல்லை என்பதால் அவரை நீக்கினால் எந்த சர்ச்சையும் எழாது என்பதற்காக இவ்வாறு செய்தீர்களா? நீங்கள் எதன் அடிப்படையில் அணியை தேர்வு செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
இந்திய அணியில் சொதப்பி வரும் பலர் அணியில் நீடிக்கிறார்கள். ஆனால் புஜாரா போன்ற வீரர் ஏன் நீக்கப்படுகிறார். மேலும் தேர்வு குழு தற்போது எதன் அடிப்படையில் அணியை தேர்வு செய்தோம் என்பது குறித்து ஊடகங்களை சந்திக்காமல் நழுவுவது ஏன்? ரஹானேவை தவிர பைனலில் யாருமே சரியாக விளையாடவில்லை. அப்படி இருக்கும்போது ஒருவரை மட்டும் நீக்குவது சரி கிடையாது. ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்திருக்கும் வீரராக சர்பிராஸ் கான் திகழ்கிறார்.
இந்திய அணியில் தேர்வு செய்வதற்காக அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும். பிளேயிங் லெவனில் இல்லை என்றால் கூட அவரை அணியில் தேர்வு செய்து அழைத்து செல்லலாம். உங்களுடைய ரஞ்சி கிரிக்கெட்டில் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது என்று எண்ணமாவது அவருக்கு தோன்றும். இப்போது ஐபிஎல்லில் விளையாடி ரன் சேர்த்தால் போதும். ரஞ்சி கிரிக்கெட் தேவையில்லை என்று நீங்கள் முடிவெடுப்பது போல் தெரிகிறது. பிறகு எதற்கு நீங்கள் ரஞ்சி கிரிக்கெட்டை நடத்த வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.