குத்துச் சண்டை டூ கிரிக்கெட்.. சென்னை அணி எடுத்த வீரருக்கு இப்படியொரு பின்னணி இருக்கா?

கடந்த ஆண்டு இதே நேரத்தில், ஹரியானாவின் ரோஹ்தக்கைச் சேர்ந்த 18 வயது இளம் ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்து மேற்கிந்திய தீவுகளில் நடந்த U-19 உலகக் கோப்பைக்கு, இந்திய அணி சார்பாக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, அணி இறுதியில் பட்டத்தை வெல்லும் என்று அவர் நினைத்துப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.
ஆனால், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ரசிகராக இருப்பதால், அவர் தனது இயல்பான ஆட்டத்தை நம்பி அணியின் வெற்றிக்கு பங்களிக்க முயற்சி செய்தார். ஆனால் வெஸ்ட் இண்டீசில், அவர் ஐந்து ஆட்டங்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சிறந்த செயல்திறன் கொண்டவர்களில் ஒருவராக இருந்தார். அவரது அணி வீரர்கள் சிலர் ஐபிஎல் 2022 இல் இடம்பிடித்தாலும், நிஷாந்த்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று ஐபிஎல்லில் இடம்பிடிக்கும் அவரது கனவு நனவாகியது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸால் (சிஎஸ்கே) ரூ. 60 லட்ச ரூபாய்க்கு மினி ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
நிஷாந்த் இது குறித்து கூறுகையில், "நான் எப்போதும் ஐபிஎல்லில் விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன். அதை மனதில் வைத்துக்கொண்டு, விரைவில் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற என்னை தயார்படுத்திக் கொண்டேன். கடின உழைப்பு பலனளித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.
குத்துச்சண்டை டூ கிரிக்கெட் : நிஷாந்தின் பின்னணி
கிரிக்கெட்டைத் தொடரும் முன், நிஷாந்த், மாநில அளவிலான குத்துச்சண்டை வீரரான தனது தந்தை சுனில் சிந்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, குத்துச்சண்டை வீரராகப் பயிற்சி பெற்றார். ஆனால் முன்னாள் ஹரியானா முதல்தர கிரிக்கெட் வீரர் அஸ்வனி குமார் நடத்தும் அகாடமியில் சேர்ந்த பிறகு, கிரிக்கெட் மீது தீரா காதல் கொண்டார்.
2018-19 யு-16 விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் சிந்து 572 ரன்கள் குவித்து 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக ஹரியானாவை வெற்றிபெறச் செய்தார்.
“நான் குத்துச்சண்டை விளையாடத் தொடங்கியபோது, ஒருநாளும் கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றி நான் நினைக்கவில்லை. மேலும் ஐபிஎல்லில் விளையாடுவது பற்றி நான் கற்பனை செய்யவில்லை. ஆனால் விஷயங்கள் நடந்தன. நான் இப்போது ஐபிஎல்லின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என அவர் கூறினார்.
ஜடேஜாவின் ரசிகராக இருப்பதால், நிஷாந்த் இப்போது சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூமில் அவரைச் சந்திக்கும் போது அவரது ஆலோசனையை முழுமையாக பெறவும் திட்டமிட்டுள்ளார்.
“யு-19 உலகக் கோப்பைக்குப் பிறகு, ஐபிஎல்லுக்குத் தயாராக வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. இப்போது தயாராக இருப்பதும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதும்தான் நோக்கம். அது என் வழியில் வந்தால், நூற்றுக்கு நூறு சதத்தைக் கொடுக்க வேண்டும்” என்று சிந்து கூறினார்.