ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு.. இந்திய டி20 அணியை அறிவித்த பிசிசிஐ..

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் பொறுப்பேற்ற பின் தேர்வு செய்துள்ள முதல் அணி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கேற்ப சீனியர் வீரர்கள் யாரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் வழக்கம் போல் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கம் போல் சுப்மன் கில், சாஹல், அர்ஷ்தீப் சிங், உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் லக்னோ அணிக்காக சிறப்பாக ஆடிய ஆவேஷ் கான், டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முகேஷ் குமார், உம்ரான் மாலிக் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஒருநாள் அணியில் இடம்பிடித்த இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் டி20 அணியிலும் இடம்பிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா இருவரும் முதல்முறையாக இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திலக் வர்மா இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி: ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சாஹல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சுப்மன் கில், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்