நாட்டுக்காக ஐபிஎல்-ஐ கைவிட்ட வங்கதேச வீரர்களுக்கு பணத்தை அள்ளி வீசிய கிரிக்கெட் வாரியம்; ரசிகர்கள் ஆச்சரியம்

டாக்கா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை விட தேசிய கிரிக்கெட் அணிக்கு முக்கியத்துவம் கொடுத்த வங்கதேச அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 53 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஆல்ரவுண்டரான அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். எனினும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை.
டெஸ்ட் அணியின் துணை கேப்டன் லிட்டன் தாஸ், அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். எனினும் கொல்கத்தா அணிக்காக ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடிய நிலையில் தாயகம் புறப்பட்டுச் சென்றுவிட்டார். வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமதுவையும், ஐபிஎல் அணி ஒன்று அணுக அவர் போட்டியில் விளையாட மறுத்து விட்டார்.
இந்நிலையில் இந்த மூன்று வீரர்களுக்கும் அந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் இழப்பீட்டு தொகையாக 53 லட்சத்து 36 ஆயிரத்து 272 ரூபாயை வழங்கியுள்ளது. இது இழப்பீடாக வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஷகிப் அல்ஹசன், லிட்டன் தாஸ், தஸ்கின் அகமது ஆகியோருக்கு இழப்பீட்டு தொகை பகிர்ந்து அளிக்கப்படும். இது எங்களின் சிறிய பங்கு.
அவர்கள் எங்களிடம் முறைப்படி எந்தப் தொகையையும் கோரவில்லை, ஆனால் முழுமையாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். இது வழக்கமான நடைமுறையாக இருக்காது. தேசிய அணிக்காக விளையாடுவது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும். ஆனால் வீரர்களின் நலனும் எங்கள் முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதால், தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.