இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸை குழந்தையாக சித்தரித்து கிண்டல் செய்த ஆஸ்திரேலியா பத்திரிக்கை நிறுவனம்; என்ன காரணம் தெரியுமா?

ஆஸ்திரேலியா : ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவின் சர்ச்சைக்குரிய விக்கெட் தொடர்பாக கருத்து தெரிவித்த பென் ஸ்டோக்ஸை, ஆஸ்திரேலிய பத்திரிக்கை நிறுவனம் கிண்டல் செய்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றிவசம் இங்கிலாந்திடம் இருக்க அதை தட்டிப் பறித்த ஆஸ்திரேலிய அணி, வாகை சூடியது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 416 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களும் எடுத்தது.
அதேசமயம் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டம் இழந்த இங்கிலாந்து அணி, 91 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் வெற்றி இலக்கான 371 ரன்களை துரத்தி விளையாடியது. அந்த அணியின் பென்ஸ் ஸ்டோக்ஸ் மட்டும் 155 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த போட்டியின் போது, பந்து டெட் என எண்ணி லார்ட்ஸ் ஸ்ட்ரைக்கில் இருந்த இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ கிரீஸை விட்டு நகர்ந்து சென்றார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்புகளை தகர்த்தார். அதையடுத்து அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளானது.
இது குறித்து பேட்டியளித்த பென் ஸ்டோக்ஸ், கீழ்த்தரமாக அவுட்டாக்கி வெல்ல வேண்டுமா? என்று விமர்சித்தார். மேலும் தாங்களாக இருந்தால் அந்த முடிவை திரும்ப பெற்று பேட்ஸ்மேனை மீண்டும் விளையாட அழைத்திருப்போம் என்று கூறினார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், நாங்கள் விதிமுறைப்படியே நடந்து கொண்டோம். என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.
இந்நிலையில் தாங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் அழுது புலம்பி விமர்சித்து தீர்ப்பதாக இங்கிலாந்தை பிரபல மேற்கு ஆஸ்திரேலியன் பத்திரிக்கை வெளிப்படையாக கலாய்த்துள்ளது. குறிப்பாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முகத்தை ஒரு பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து எடிட் செய்து அவருடைய வாயில் பால் டப்பாவை வைத்திருப்பது போல் அந்த பத்திரிக்கை சித்தரித்துள்ளது. அதிலும் குறிப்பாக புதிய பந்தை ஒழுங்காக பிடித்து விளையாட தெரியாமல் ஆஷஸ் கோப்பையை தவற விடாதீர்கள் என்ற வகையில் அந்த பத்திரிக்கை நிறுவனம் கலாய்த்துள்ளது.