IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன்..?? காயத்தால் வீரர்கள் விலகல் ..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது, ஆஸ்திரேலிய அணி மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து பவுலர் ஜோஷ் ஹேஸில்வுட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார், அவரை தொடர்ந்து முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 2வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் ஸ்கேன் அறிக்கையில் எலும்பு முறிவு என்று உறுதியான நிலையில் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளார், 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியில் இணைவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி புதிய கேப்டன் தலைமையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆஸ்திரேலியா சென்றுள்ள பேட் கம்மின்ஸ் சரியான நேரத்தில் இந்தியா திரும்ப முடியவில்லை என்றால், மார்ச் 1 ஆம் தேதி இந்தோரில் தொடங்க உள்ள ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவன் ஸ்மித் வழி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி பார்டர் கவாஸ்கர் தொடரின் முடிவை அறிய முக்கியமான போட்டி என்பதால், இந்த 3வது டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.