IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்..!! அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் அடுத்து நடைபெற உள்ள 3 வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகினார், புதிய கேப்டன் உடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது, மேலும் மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்கும் ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் உள்ள நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செய்யப்பட்டு தொடரை சமன் செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் சிலர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது அணிக்கு பின்னடைவு அளித்தது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலியா சென்றார்.மேலும் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் அணியில் இணைவார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்த நிலையில், தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் பேட் கம்மின்ஸ் உடைய தாயின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் 3வது டெஸ்ட் போட்டியில் அவர் விலகியுள்ளார், மேலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்மித், 3வது டெஸ்ட் போட்டியில் அணியையும் வழிநடத்துவார் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 3 வது டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் உடைய இடத்தில் காயத்தில் இருந்து மீண்டு உள்ள மிட்செல் ஸ்டார்க் பங்கேற்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும், அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் வெற்றியை பெற போராடும் என்பதால் ரசிகர்கள் போட்டியை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.