IND VS AUS TEST 2023 : ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பௌலர் தொடரில் இருந்து விலகல்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மன்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பவுலர் ஒருவரும் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்று முன்னிலையில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தவிர்க்க முடியாத சொந்த காரணத்திற்காக ஆஸ்திரேலியா திரும்பி உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தொடரின் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில்,அதற்கு முன் அணியுடன் இணைவார் என்று தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு மேலும் சோகம் தரும் விதத்தில் அணியின் முன்னணி வேகப்பந்து பௌலர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக முழுமையாக தொடரில் இருந்து விலகி உள்ளார் என்று ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு உள்ள மிச்செல் ஸ்டார்க் மற்றும் கேமெரூன் கிறீன் இருவரும் இணைய வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பதால், ஆஸ்திரேலியா அணிக்கு முக்கியான போட்டியாக 3 வது டெஸ்ட் போட்டி விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.