Ashes Test | 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.. பென் ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்..

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து கைவசம் இருந்த ஆட்டத்தை தட்டிப்பறித்து ஆஸ்திரேலியா அணி, வெற்றிவாகை சூடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில், பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 416 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக, பென் டக்கெட் 98 ரன்களும், ஹாரி புரூக் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
91 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 279 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 77 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலியா அணி 370 ரன்கள் முன்னிலை பெற்று இந்த நிலையில், 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.
ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் வேகப்பந்து வீச்சால் ஆடிப்போன அந்த அணி, 45 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய வீரர் பென் ஸ்டோக்ஸ், ஒற்றை ஆளாய் களத்தில் நின்று ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 150 ரன்களை அவர் குவித்த நிலையில், தனி ஒருவனாய் இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்வார் என பலரும் எதிர்பார்த்தனர்.இங்கிலாந்து அணி 301 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டோக்ஸ் 155 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் கை ஓங்கியதால் இங்கிலாந்து அணி 325 ரன்களு க்கு ஆட்டம் இழந்தது.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி, இரண்டுக்கு பூஜ்ஜியம் என்னும் கணக்கில் கைப்பற்றியது. இதனால் வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது.