சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய அஸ்வின்... சுழற்பந்துவீச்சாளருக்கு குவியும் பாராட்டு...

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை எடுத்து அஸ்வின் சாதனை புரிந்துள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
போட்டி நடைபெறும் டோமினிகோ பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டும்தான் ஒத்துழைப்பு தரும் வகையில் இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களால் சிறப்பாக செயல்பட முடியாத நிலை இருந்தது. துவக்கத்தில் முகமது சிராஜ், ஜெய்தேவ் உனாத்கட் இருவரும் அபாரமாக பந்துவீசியும், எந்த பலனும் கிடைக்கவில்லை. டி சந்தர்பால் இடது கை பேட்டர் என்பதால், 10 ஓவர்கள் முடிந்த உடனே ரவிச்சந்திரன் அஸ்வினை ரோஹித் ஷர்மா கொண்டு வந்தார். அதற்கு பலன் கிடைத்தது. சந்தர்பாலை 12 (44) அஸ்வின் கிளின் போல்ட் ஆக்கினார். அடுத்து, மற்றொரு ஓபனர் பிராத்வெய்ட் 20 (46) விக்கெட்டையும் அஸ்வின் எடுத்துக்கொடுத்தார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு துவக்கத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது.
ஓபனர்கள் இருவரும் விரைவாக ஆட்டமிழந்தப் பிறகு ரைபர் 2 (18) ஷர்தூல் தாகூரிடமும், பிளாக்வுட் 14 (34) ரவீந்திர ஜடேஜாவிடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து, மிடில் வரிசை வீரர் அலிக் ஆதனஸ் 47 (99) மட்டும்தான் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டார். இவரை தவிர வேறு யாரும் 20க்கு அதிகமான ரன்களை அடிக்கவில்லை. ஹோல்டர் 18 (61), கார்ன்வெல் 19 (34) ஆகியோர் கொஞ்சம் ரன்களை அடித்தார்கள்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 64.3 ஓவர்கள் முடிவில் 150/10 ரன்களை மட்டும் எடுத்து, ஆல்-அவுட் ஆனது. ரவிச்சந்திரன் அஸ்வின் 5/60 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 3/26 விக்கெட்களையும் சாய்த்தார்கள்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இந்திய அணியில் ஓபனர்கள் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 40 (73), ரோஹித் ஷர்மா 30 (65) ஆகியோர் சிறந்த துவக்கத்தை தந்து வருகின்றனர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 80/0 ரன்களை எடுத்துள்ள நிலையில், முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்திய பௌலர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் முத்தையா முரளிதரன் 1347 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆண்டர்சன் 975 விக்கெட்களுடனும், மூன்றாவது இடத்தில் அனில் கும்ளே 956 விக்கெட்களுடனும் இருக்கிறார்கள்.