IND VS AUS TEST 2023 : சர்வதேச அரங்கில் புதிய சாதனைகளை படைத்து இந்திய வீரர்கள் அஸ்வின், ஜடேஜா அசத்தல்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இந்த தொடரில் இந்திய அணி முதல் தோல்வியை தழுவினாலும் இந்திய வீரர்கள் பலர் சர்வதேச அரங்கில் புதிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை பெற்றார், இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் கபில் தேவ் உடைய சாதனையை முறியடித்து முன்னிலை பெற்றுள்ளார்.
அதாவது இந்திய அணிக்காக சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் கபில் தேவ் 356 போட்டிகளில் விளையாடி 687 விக்கெட்களை பெற்று 3 வது இடத்தில் இருந்தார், தற்போது அஸ்வின் மிக விரைவாக வெறும் 269 போட்டிகளில் விளையாடி 689 விக்கெட்டுகளை கைப்பற்றி 3 வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்த பட்டியலில் முன்னாள் வீரர்கள் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் முறையே 953 விக்கெட்டுகள் மற்றும் 707 விக்கெட்டுகள் பதிவு செய்து முதல் இரண்டு இடங்களில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் தொடரில் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்திய அணியின் மிரட்டல் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் சர்வதேச அரங்கில் 500 விக்கெட்டுகளை பெற்ற 7 வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த போட்டியில் மேலும் ஒரு சாதனையாக ஜடேஜா சர்வதேச அளவில் 5000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்களை பெற்ற 2வது இந்திய வீரர் என்ற புதிய மைல்கல்லை அடைந்தார்.இந்த பட்டியலில் இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவ் மட்டும் இருந்த நிலையில் தற்போது அவருடன் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், இந்திய அணிக்கு பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வந்த இந்திய அணியின் ஸ்பின் ஜோடி அஸ்வின் மற்றும் ஜடேஜா புதிய மைல்கல்லை அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற நிலையில் இந்திய அணி முன்னணியில் இருந்தாலும், அடுத்து நடைபெற உள்ள கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றுவது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.