WPL 2023 : ஆஷ்லே கார்ட்னர் அதிரடியில் குஜராத் ஜெயின்ட்ஸ் அசத்தல் வெற்றி..!! தொடரில் முன்னேற்றம்..!!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 14 வது லீக் போட்டியில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியின் இளம் வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார், இதன்மூலம் குஜராத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேறியது.
மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயின்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயின்ட்ஸ் அணியின் இளம் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 57(45) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அணியின் இளம் வீராங்கனைகள் ஹர்லீன் டியோல் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக ஆஷ்லே கார்ட்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 51*(33) ரன்கள் பெற்று அசத்தினார்.இந்நிலையில் குஜராத் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் பதிவு செய்தது.
அதன்பின் 148 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி வீராங்கனைகள் ஆரம்பம் முதலே குஜராத் அணி பவுலிங்கில் திணறினார்கள். டெல்லி அணியின் வீராங்கனைகள் உடனுக்குடன் ஆட்டமிழந்த நிலையில், 18.4 ஓவர்கள் முடிவில் வெறும் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, அதிகபட்சமாக மரிசான் காப் 36(29) ரன்கள் பெற்றார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் ஜெயின்ட்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற்றம் அடைந்தது, அணியின் வெற்றிக்கு உதவிய இளம் ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். அதே சமயத்தில் டெல்லி அணி இந்த போட்டியில் தோல்வி பெற்ற நிலையிலும் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.