இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..!! | ashish nehra 44th birthday special article

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா தனது 44 பிறந்த நாளில் காலடி எடுத்து வைக்கிறார், தனது 18 வருட கிரிக்கெட் பயணத்தில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் நெஹ்ரா கிரிக்கெட் அரங்கில் பதிவு செய்த சில சாதனைகளை காண்போம்.
இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து வந்த இடது கை வேகப்பந்து பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக பிப்ரவரி 1999 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் விளையாடினர். அதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரிலும் 2009 ஆம் ஆண்டு டி20 தொடரிலும் களமிறங்கி விளையாடினார்.
சர்வதேச தொடரில் பங்களிப்பு :
இந்திய அணிக்காக 18 வருடம் விளையாடிய நெஹ்ரா 17 டெஸ்ட் போட்டிகள் 44 விக்கெட்களையும் , 120 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 157 விக்கெட்களையும் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கிரிக்கெட் பயணத்தில் ஏற்றத்தையும் இரக்கத்தையும் பலமுறை சந்தித்துள்ள நெஹ்ரா எப்போதும் ஒரே மனம் தளராத தன்மை கொண்டவர் என்று கிரிக்கெட் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை பெற்ற இந்திய அணியில் முக்கிய அங்கமாக ஆஷிஷ் நெஹ்ரா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 உலகக்கோப்பை VS இங்கிலாந்து :
2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார் நெஹ்ரா, குறிப்பாக டர்பனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்திய ஆஷிஷ் நெஹ்ரா 10 ஓவர்கள் வீசி வெறும் 23 ரன்கள் வழங்கி 6 விக்கெட்டுகளை பெற்று இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
2011 உலகக்கோப்பை VS பாகிஸ்தான் :
இந்திய அணிக்காக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெஹ்ரா, மொஹாலியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கிய போட்டியில் இந்திய அணி 260 ரன்கள் பதிவு செய்து பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில் களத்தில் மிரட்டல் பவுலிங்கை வெளிப்படுத்தி 10 ஓவர்கள் வீசி வெறும் 33 ரன்கள் அளித்து 2 விக்கெட்டுகளை பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார், இந்த போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அரங்கில் நெஹ்ராவின் பயணம் :
ஐபிஎல் அரங்கில் 2008 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் முறையாக களமிறங்கிய ஆஷிஷ் நெஹ்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2017 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் அரங்கில் ஒரு கலக்கு கலக்கினார் என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ரா அசத்தியுள்ளார் , குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆஷிஷ் நெஹ்ரா 10 ரன்கள் வழங்கி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு உதவி உள்ளார்.
ஐபிஎல் தொடரில் 88 போட்டிகளில் விளையாடி உள்ள நெஹ்ரா 7.85 எகானமி உடன் 88 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதன்பின் 2017 ஆம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற நெஹ்ரா புதிய அவதாரம் எடுத்து பயிற்சியாளராக களமிறங்கி அசத்தினர்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக நெஹ்ரா :
ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு முதன் முறையாக கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா செயல்பட்டு, முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை குஜராத் அணி பெற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2023 தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தல் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் நல்ல இடத்தில் உள்ளது, எனவே இந்த ஆண்டும் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்ற பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா முழு பங்களிப்பையும் அளிப்பார் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.