ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டி: லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதல்!

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் ஆஷஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அடைந்த தோல்விக்கு முதல் இன்னிங்ஸில் அவசர அவசரமாக டிக்ளேர் செய்ததே காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொயின் அலி சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஜோஷ்வா டங்க் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளரான இவர், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்தப் போட்டியும் லார்ட்ஸ் மைதானத்திலேயே நடைபெற்றது.
லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆண்டர்சன், பிராட், ராபின்சன், ஜோஷ்வா டங்க் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என்று 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளது. இன்னொரு பக்கம் 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று ஆஷஸ் தொடரில் ஆதிக்கத்தை தொடர ஆஸி. அணி முனைப்புடன் உள்ளது. முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால் ஆஸி. அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புகள் இல்லை.
ஆனால் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்கள். இவர்கள் மூவரில் ஒருவர் சிறப்பாக ஆடினாலும் இங்கிலாந்து அணிக்கு சிக்கல் தான். ஏனென்றால் லார்ட்ஸ் மைதானத்திலும் பிளாட் பிட்ச்களை அமைக்கவே இங்கிலாந்து அணி தரப்பில் கோரப்பட்டுள்ளது. இதனால் ஆஸி. அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளது.