ஆஷஸ் தொடர்: கெத்து காட்டிய இங்கிலாந்து.. ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா.. உற்சாகத்தில் பிரிட்டன் ரசிகர்கள்..

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஐந்து போட்டிகள் ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் கொண்டுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடியது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது.
இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி கடந்த வாரம் லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்ட்டோக்ஸ் 80 ரன்கள் குவித்தார். கம்மின்ஸ் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 26 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சால் ஆட்டம் கண்டது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 77 ரன்களும், உஸ்மான் காவாஜா 43 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இருந்தனர். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது.
இதன் பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், பொறுப்புடன் விளையாடினர். தொடக்க வீரர் ஜாக் கிரவுலி மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் ரன் உயர்வுக்கு காரணமாக இருக்க, இங்கிலாந்து மெல்ல மெல்ல இலக்கை எட்டியது. 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஷஸ் தொடரில் இரண்டுக்கு ஒன்னு என்னும் கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னணியில் இருந்தாலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்தின் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது.