2024 ஐபிஎல் தொடரில் முகமது அமீர்? இங்கிலாந்து குடியுரிமையால் நடக்கப் போகும் மாற்றம்!

லண்டன் : பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர், 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் தற்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற இருக்கிறார். இளம் வயதிலேயே பாகிஸ்தான் அணிக்காக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அபார தாக்கத்தை ஏற்படுத்தியவர் முகமது அமீர். ஆனால் 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் செய்து ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முகமது அமீருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் விளையாடினார்.
அதன் பிறகு, 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் இங்கிலாந்தில் தங்கி உள்ள முகமது அமீர் அங்கு உள்ள கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது முகமது அமீர் பிரிட்டன் குடியுரிமை பெற இன்னும் ஒரு ஆண்டு தான் தேவைப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் எல்லாம் அவர் இங்கிலாந்து குடிமகனாக மாறிவிடுவார்.
இதன் மூலம் அவருக்கு பிரிட்டன் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன் பிறகு முஹம்மது அமீர் இங்கிலாந்து அணிக்காக கூட விளையாட வாய்ப்பு ஏற்படலாம். மேலும் அமீர் இங்கிலாந்து குடிமகனாக மாறிவிட்டால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவும் எந்த தடையும் இல்லை. இதுகுறித்து பேசிய முகமது அமீர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் எண்ணம் எனக்கு இதுவரை இல்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன்.
தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து எந்த அணி உரிமையாளர்களிடம் பேசவில்லை. ஐபிஎல் தொடரில் என்ன நடக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் பலரும் வெளிப்படையாக பேசுவதில்லை என்று முகமது அமீர் தெரிவித்துள்ளார்.