தந்தையை மிஞ்சுவாரா தனயன்? ரஞ்சி டிராபியின் அறிமுக போட்டியிலேயே சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 15, 2022 & 16:08 [IST]

Share

தனது தந்தை சச்சின் டெண்டுல்கரின் சாதனையைப் பின்பற்றும் வகையில் அர்ஜுன் டெண்டுல்கர் நேற்று தனது ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காக சதம் அடித்தார். 

சச்சின் டெண்டுல்கர், மும்பை அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது கேரியரை தொடங்கினார். ரஞ்சி டிராபியில் முதல் முறையாக மும்பை அணிக்காக விளையாடியபோது, தனது முதல் போட்டியில் சதமடித்திருந்தார்.

அதே போல், அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை அணியில் தான் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். ஆனால் அதிக வாய்ப்புகளைப் பெறுவதற்காக மும்பையில் இருந்து கோவாவுக்கு பின்னர் தளத்தை மாற்றிக் கொண்டார்.

அங்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் மூன்று வடிவ விளையாட்டுகளிலும் ஆடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காக களமிறங்கினார்.

ரஞ்சி டிராபியில் இது அவரது முதல் போட்டியாகும். இந்நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் 2-வது நாளில் தனது முதல் முதல் தர சதத்தை அடித்தார்.

ஆட்டத்தின் முதல் நாளில் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சுயாஷ் பிரபு தேசாய் இருவரும் சதம் அடித்து கோவாவை ஆட்டத்தின் 2வது நாளில் வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அர்ஜுன் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இடது கை ஆட்டக்காரரான அவர் 207 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசினார்.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாலும், தற்போது வரை ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.