தேர்வுக் குழு தலைவருக்கான போட்டியில் களமிறங்கும் அஜித் அகர்கர்

மும்பை: இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் அணிக்கான தேர்வுக் குழு தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழு தலைவராக சேத்தன் சர்மா செயல்பட்டு வந்தார். ஆனால் தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சேத்தன் சர்மா, வேறு வழியின்றி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி மாதத்தில் சேத்தன் சர்மா ராஜினாமா செய்த நிலையில், அவரது இடம் இன்று வரை நிரப்பப்படாமலேயே உள்ளது.
இதன் பின்னர் தேர்வுக் குழுவின் இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களுக்கும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வுக் குழு தலைவருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.
இதன் பின்னர் தேர்வுக் குழு தலைவராக செயல்பட பிசிசிஐ தரப்பில் வீரேந்தர் சேவாக்கிடம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் முற்றிலும் மறுத்தார். இதனால் புதிய தேர்வுக் குழு தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதேபோல் தேர்வுக் குழு தலைவருக்கான ஊதியம் மிக குறைவு என்பதால் முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பை ஏற்ப முன் வரவில்லை.
இந்த நிலையில் புதிய தேர்வுக் குழு தலைவரான போட்டியில் இந்திய முன்னாள் வீரர் அஜித் அகர்கர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அஜித் அகர்கர், இந்திய அணிக்காக 190க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.