தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரவி சாஸ்திரி, அஜித் அகர்கர்!

மும்பை: இந்திய அணிக்காக தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர்களான அஜித் அகர்கர் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கினார். இதனால் விசாரணைக்கு முன்பாகவே, சேத்தன் சர்மா தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக தேர்வுக் குழு தலைவர் பதவி பிப்ரவரி மாதத்தில் இருந்து நிரப்பப்படாமலேயே உள்ளது.
இதனால் இடைக்கால தலைவராக ஷிவசுந்தர் தாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடந்த வாரத்தில் அறிவித்தது. இதற்கான கடைசி நாள் ஜூன் 30ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் அடுத்த தேர்வுக் குழு தலைவராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த பதவிக்கு முதலில் முன்னாள் வீரர் சேவாக் பெயர் அடிபட்டது. ஆனால் அதனை சேவாக் முற்றிலும் மறுத்தார். இந்த நிலையில் கடந்த இருமுறையும் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அஜித் அகர்கர், இம்முறை வாய்ப்பை பெறலாம் என்று தகவல் வெளியாகியது. தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதன்பின்னர் விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி சிஏசி குழுவினால் நேர்காணல் நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் தேர்வுக் குழு தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய மகளிர் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் நேர்காணல் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.