எனக்கும், சூரியகுமாருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு, நான் ஆடாத ஷாட்களை அவர் ஆடுகிறார் - புளங்காகிதம் அடைந்த டிவில்லியர்ஸ்

தனக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் சூரிய குமாருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை காண முடிவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் நேர்த்தியாகவும், எளிதாகவும் ரன் குவிப்பதில் வல்லவர்கள் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் மற்றும் இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ். அதன் காரணமாக அவர்கள் மிஸ்டர்.360 டிகிரி என அறியப்படுகின்றனர்.
கடந்த 2021-ல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார். மறுபக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் அதே ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார் சூர்யகுமார் யாதவ். தனது அதிரடி பாணி ஆட்டத்தால் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திலும் சூர்யகுமார் உள்ளார்.
இந்த சூழலில் சூர்யகுமாரின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார் டிவில்லியர்ஸ். “நான் ஆடாத ஷாட்களை ஆடுகிறார் சூர்யகுமார் யாதவ். அவர் கிரிக்கெட் உலகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. வரும் நாட்களில் தற்போதைய ஆட்டத்தை காட்டிலும் மேலும் சிறப்பாக ஆடும் கூடுதல் ஆட்டத்திறனை கொண்டுள்ள வீரராக அவர் திகழ்வார் என்று எண்ணுகிறேன். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தன்னை ஒரு சீரான வீரராக நிலை நிறுத்துவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். எங்களுக்குள் நிறைய ஒற்றுமை இருப்பதை நான் காண்கிறேன்” என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல், இந்திய அணிக்கு யார் கோப்பையை வென்றுகொடுப்பார் என்பது குறித்துப் பேசினார். அதில், ''மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் ஜஸ்பரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இருப்பார்கள். தன்னுடைய பங்களிப்பு மூலம் ஆட்டத்தை மாற்றக் கூடியவர்தான் பும்ரா. சூர்யகுமார் யாதவும் கேம் சேஞ்சர்தான்'' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.