39வது பிறந்தநாள் காணும் கிரிக்கெட் உலகின் மிஸ்டர் 360 ஏ பி டி வில்லியர்ஸ்..!! சாதனைகள் ஒரு பார்வை ..!!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கிய ஒருவரான ஏ பி டி வில்லியர்ஸ் வரும் பிப்ரவரி 17 2023 ஆம் நாள் 39 வயதை அடைய உள்ளார், இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் ஜாம்பவான் டி வில்லியர்ஸ் உடைய கிரிக்கெட் சாதனைகளை காண்போம்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் முக்கிய ஒருவரான ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் பிப்ரவரி 17 1984 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரில் பிறந்தார், அப்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வரலாற்றில் இடம் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக மட்டும் டி வில்லியர்ஸ் செயல்படாமல் விக்கெட் கீப்பிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கியதால் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களால் போற்ற பட்ட ஒரு வீரராக திகழ்ந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் என்ட்ரி :
சர்வதேச அளவில் தென்னாபிரிக்கா அணிக்காக டிசம்பர் 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர், அதனை தொடர்ந்து பிப்ரவரி 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பிப்ரவரி 2006 ஆம் ஆண்டு தனது முதல் டி20 போட்டியில் அறிமுகமானார்.
தென்னாபிரிக்கா அணிக்காக சர்வதேச அளவில் தனது முதல் டெஸ்ட் சதத்தை 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பதிவு செய்தார், அதன்பின் தனது முதல் ஒருநாள் சதத்தை 2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார்.
டி வில்லியர்ஸ் உடைய மகத்தான சாதனைகள் :
சர்வதேச அரங்கில் தென்னாபிரிக்கா அணிக்கு 15 ஆண்டு காலமாக சிறப்பாக பணியாற்றிய டி வில்லியர்ஸ் பல சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார், அவற்றில் சில முக்கிய சாதனைகளை காண்போம்.
1) டி வில்லியர்ஸ் ஒருநாள் போட்டியில் வேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார், 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 50 ரன்கள் பெற்று இந்த சாதனையை அரங்கேற்றினர்.
2) மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அதே போட்டியில் அதிரடி பேட்டிங்கை தொடர்ந்த டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் 100 ரன்கள் பெற்று வேகமாக ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
3) அதேபோல் பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி வில்லியர்ஸ் வேகமாக 150 ரன்கள் பெற்று சாதனை படைத்தார், வெறும் 64 பந்துகளில் இந்த சாதனையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டிவில்லியர்ஸ் 16 சிக்சர்கள் அடித்து ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று, அப்பட்டியலில் ஏற்கனவே இருந்த வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ரோஹித் சர்மா உடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
5) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 205 இன்னிங்ஸில் 9000 ரன்கள் பெற்ற நிலையில், வேகமாக 9000 ரன்கள் அடித்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த பட்டியலில் முதலிடத்தில் விராட் கோலி (194) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அரங்கில் குவித்த ரன்கள் :
டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 இரட்டை சதம் ,22 சதம் உட்பட 8765 ரன்கள் பதிவு செய்துள்ளார், அதேபோல் 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள டி வில்லியர்ஸ் 25 சதங்கள் உட்பட 9577 ரன்கள் பெற்று அசத்தியுள்ளார். அதேபோல் 78 டி20 போட்டிகளில் 1672 ரன்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தென்னாபிரிக்கா அணிக்கு டி வில்லியர்ஸ் 20014 ரன்கள் பதிவு செய்து அசத்தியுள்ளார், தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் ஜாக் காலிஸ் 25534 ரன்கள் பெற்று இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் டி20 தொடரின் சிறந்த வீரர் :
ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் டெல்லி அணிக்காக விளையாடிய டி வில்லியர்ஸ் , பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்று அந்த அணிக்காக பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் 184 போட்டிகளில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ் 3 சதம் உட்பட 5162 ரன்களை பதிவு செய்துள்ளார், இந்த தொடரின் மூலம் தான் இந்திய ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் விளையாட்டிற்கு பிரியா விடை கொடுத்த தருணம் :
தென்னாபிரிக்கா அணிக்காக 15 ஆண்டுகளாக தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் பல வெற்றிகளை பெற்று தந்த ஏ பி டி வில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு பிரியாவிடை கொடுத்தார், அவரின் இழப்பை இன்று வரை தென்னாபிரிக்கா அணியால் ஈடுகட்ட முடியவில்லை என்று கூறினால் மிகையில்லை.
அதன்பின் 2021 ஆம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து விலகினார், டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்க அணி வீரராக இருந்தாலும் தனது அதிரடி ஆட்டத்தால் உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி விருதுகள் :
1) விராட் கோலியின் நெருங்கிய நண்பரான ஏ பி டி வில்லியர்ஸ், அவரை போல் மூன்று முறை ஐசிசி யின் சிறந்த ஒருநாள் பிளேயர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2) 2020 ஆம் ஆண்டு ஐசிசி பிளேயர் ஆப் தி டே கேடு என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூலம் பெருமை படுத்த பட்டார்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் வரலாற்றில் என்றும் ஏ பி டி வில்லியர்ஸ் பெயர் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை, கிரிக்கெட் விளையாட்டின் சூப்பர் மேன் , மிஸ்டர் 360 என்றெல்லாம் போற்றப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தனது 39 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் தருணத்தில் உலகின் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.