Representative Image.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பிடி உஷா பெற உள்ளார். டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. நேற்றுடன் வேட்பு மனு தாக்கலும் முடிந்துவிட்டது.
58 வயதான பிடி உஷா, பல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் 1984 ஒலிம்பிக்ஸ் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தவர் ஆவார்.
நேற்று அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும் அவரது குழுவைச் சேர்ந்த 14 பேர் பல்வேறு பதவிகளுக்கும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
ஐஓஏ தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஐஓஏ தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எந்த வேட்புமனுவையும் பெறவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை 24 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஒரு துணைத் தலைவர் (பெண்), இணைச் செயலாளர் (பெண்) பதவிகளுக்குப் போட்டி இருக்கும். நான்கு செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.