ப்ரோ கபடி லீக் 2022: புனேரி பல்டன் அபாரம்..! தமிழ் தலைவாஸின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 16, 2022 & 11:58 [IST]

Share

ப்ரோ கபடி லீக் 2022-ல் சென்னையை மையமாக வைத்து விளையாடும் அணியான தமிழ் தலைவாஸ் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது,பின்பு அதில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி போட்டிக்கு முதல் முறையாகத் தகுதி பெற்றது.

இந்நிலையில், நேற்று தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49-29 புள்ளிகள் அடிப்படையில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்டன்  அணிகள் மோதின.

இந்த போட்டியில்  முதலில் டாஸ் வென்று ரெய்டு செய்த தமிழ் தலைவாஸ் அணி  சிறப்பான தொடக்கத்தை அளித்து விளையாடி புள்ளிகளைப்  பெற்றார்கள், அஜிங்க்யா பவார் வழக்கம் போல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் போட்டியின் ஆரம்பத்தில் 15-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமிழ் தலைவாஸ் முன்னிலை வகித்தது.

அதன்பின் புனேரி பல்டன் அணியின் சார்பில் துரிதமாக விளையாடிய பங்கஜ் மோஹிதே தனது அணியின் நிலையைச் சற்று மாற்றி அமைத்தார். மேலும்  இரு அணிகளும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்ததால் போட்டி  சமநிலையில் சென்றது. இறுதியாக புனேரி பல்டன் அணி 39-37 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமிழ் தலைவாஸ் அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. புனேரி பல்டன் அணி சார்பாக பங்கஜ் மொஹிதே 16 புள்ளிகளையும் ,முகமது நபிபக்ஷ் 6 புள்ளிகளையும் பெற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.  

தமிழ் தலைவாஸ் அணியின் இந்த சீசன் பயணத்தில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாடாத போதிலும் ,அணியின் தூண்களாக செயல்பட்ட நரேந்தர் மற்றும் அஜிங்க்யா பவார் சிறப்பாக விளையாடி அரையிறுதி போட்டி வரை அணி முன்னேற வழி செய்தார்கள். இந்த அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்த போதிலும் தமிழக கபடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.