வரலாறு படைத்தார் மனிகா பத்ரா.. ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் முதல் பதக்கம்!!

ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையை மனிகா பத்ரா படைத்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ITTF-ATTU ஆசிய கோப்பை போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்த நிகழ்வில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
முன்னதாக அரையிறுதிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்த மனிகா பத்ரா இன்று நடந்த அரையிறுதி போட்டியில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தார்.
இதையடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீரரும் மூன்று முறை ஆசிய சாம்பியனுமான ஹினா ஹயாட்டாவுக்கு எதிரான போட்டியில் 4-2 என்ற கணக்கில் வென்றார். பத்ரா 11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2 என்ற செட் கணக்கில் எதிரணியை தோற்கடித்தார்.
முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தில் மிமா இட்டோவிடம் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார். தோற்றாலும், வெண்கலப் பதக்கப் போட்டியில் விளையாடி பரிசைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.