விம்பிள்டன் டென்னிஸ் : 3ம் சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்!

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் சமீபத்தில் தொடங்கியது. இதில் காயம் காரணமாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் விலகி விட்டார்.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையும், பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான ஸ்வியாடெக், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சோரிபெஸ் டோரினோவை எதிர்கொண்டார். இதில் ஆரம்ப முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக், 6-2 மற்றும் 6-0 என்னும் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நட்சத்திர வீரரும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செர்பியாவின் ஜோகோவிச், தனது இரண்டாம் சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் தாம்சனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜோகோவிச், 6-3, 7-6, 7-5 என்னும் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவ்வும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்ரியும் மோதினர். இதில் இளம் வீரர் மெத்வதேவ் 7-5, 6-4, 6-3 என்னும் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியனும், 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியுள்ள அவர் புல்தரை போட்டியான விம்பிள்டனிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடவையும் பட்டம் வென்றால் அதிக முறை விம்பிள்டன் கோப்பையை உச்சிமுகர்ந்தவரான முன்னாள் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (8 முறை) சாதனையை சமன் செய்வார்.