அதிர்ச்சித் தகவல்.. பிபா உலகக்கோப்பைக்காக 6,000 பேர் பலி?

கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பைக்கான கட்டமைப்புப் பணிகள் நடந்தபோது 6,000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த முறை கால்பந்து உலகக்கோப்பை நடக்கிறது. 2010 ஆம் ஆண்டிலேயே 2022 கால்பந்து உலகக்கோப்பை போட்டியை நடத்த உள்ளதாக பிபா அறிவித்தது. கத்தார் இதற்காக ஒரு புதிய நகரத்தையே உருவாக்கியது.
பாலைவன நாடான கத்தார் பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெயில் தெரியாத அளவிற்கு நவீன மைதானங்களை கட்டமைத்ததோடு, வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்குவதற்கு என தனித்தனியாக குடியிருப்புகளையும் உருவாக்கியது.
இந்த வேலைகளை செய்வதற்காக 30,000 புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்டனர். இந்த பணிகளுக்காக தொழிலாளர்களை கத்தார் நடத்தியவிதம் மிக மோசமாக இருந்த நிலையில், ஏற்கனவே இது குறித்து விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர்களில் 6,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.