Representative Image.
உலகக்கோப்பை அரங்கில் முக்கிய போட்டிகளில் ஒன்றான குரூப்-எச் பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையே லுசைல் மைதானத்தில் நடந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி உருகுவே அணியைத் தோற்கடித்து அடுத்த சுற்றான "சூப்பர்-16" சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் அணிகளைத் தொடர்ந்து மூன்றாவது அணியாகச் சென்றது.
இந்த போட்டியின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது போர்ச்சுகல் அணி. அவர்களின் துடிப்பான ஆட்டத்திலேயே இந்த போட்டியின் வெற்றியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்கள். உருகுவே அணி வீரர்களின் கோலுக்கான அனைத்து வாய்ப்புகளும் போர்ச்சுகல் அணி வீரர்களால் முறியடிக்கப்பட்டது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உருகுவே வீரர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கினார், இருப்பினும் போட்டியின் முதல்பாதி கோல் எதும் பதிவாகாமலே முடிந்தது.
போர்ச்சுகல் அணி வீரர்கள் ரொனால்டோ மற்றும் பெர்னாண்டஸ் சிறப்பான ஆட்டத்தினால் போட்டியின் இரண்டாவது பாதியில் 54-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோல் பதிவானது.இந்த கோலுக்கு இருவரும் அசிஸ்ட் செய்த நிலையில், கோல் புருனோ பெர்னாண்டஸ் கணக்கில் சேர்ந்தது. முன்னிலையிலிருந்த போர்ச்சுகல் அணிக்கு எதிராக உருகுவே அணி வீரர்களின் ஆட்டம் எடுபடவில்லை. போட்டியின் இறுதியில் வழங்கப்பட்ட நேரத்தில் போர்ச்சுகல் அணியின் பெர்னாண்டஸ் மேலும் ஒரு கோலை அடித்தார்.
இதனால் ஆட்டத்தின் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி உருகுவே அணியை வென்றது. 2018 உலகக்கோப்பை நாக்-கவுட் சுற்றின் போட்டியில் உருகுவே அணி போர்ச்சுகல் அணியைத் தோற்கடித்தது. அதற்குப் பதிலடியாக இந்த போட்டி அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போட்டியின் தோல்வியின் மூலம் உருகுவே அணிக்கு அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.