Representative Image.
பிரான்சின் பிரகாசிக்கும் நட்சத்திரமான கைலியன் எம்பாப்பே மற்றும் மூத்த வீரர் ஆலிவியர் ஜிரோட் நேற்று போலந்துக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்தனர்.
கைலியன் எம்பாப்பே கோல்டன் பூட் போட்டியில் முன்னணியில் இருக்கும் நிலையில், ஜிரோட் இப்போது சர்வதேச அளவில் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல் அடித்தவர் எனும் சாதனையை படைத்துள்ளார். இருவரின் சாதனையுடன் போலந்துக்கு எதிராக பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.
ஆலிவியர் ஜிரோட் 44-வது நிமிடத்தில் கோல் அடித்த பிறகு, தியரி ஹென்றியை பின்னுக்குத் தள்ளி, பிரான்ஸின் சார்பில் அதிக கோல் அடித்தவர் எனும் சாதனையை படைத்தார். தற்போது சர்வதேச அரங்கில் 52 கோல்களை அடித்துள்ள ஆலிவியர் ஜிரோட், ஹென்றியின் 51 கோல் சாதனையை முறியடித்துள்ளார்.
பீலேவின் சாதனையை எம்பாப்பே முறியடித்தார்
பிபா உலகக் கோப்பை 2022 சுற்று 16இல் நேற்று நடந்த ஆட்டத்தில் போலந்துக்கு எதிராக 2 கோல்கள் அடித்து, பிரேசிலிய கால்பந்து வீரர் பீலேவின் சாதனையை 23 வயதான பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே தகர்த்தார்.
கைலியன் எம்பாப்பே இப்போது பிபா உலகக்கோப்பையில் 24 வயதிற்குட்பட்ட வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவர் எனும் சாதனையை படைத்துள்ளார். அவர் தற்போதுவரை 9 கோல்களைப் பெற்றுள்ளார். இது பிபா உலகக் கோப்பையில் 24 வயதிற்குட்பட்ட எந்தவொரு தனிநபராலும் இதுவரை எடுக்கப்படாத அதிகபட்ச கோல்களாகும்.
அவர் இதன் மூலம் கால்பந்து ஜாம்பவான்களான டியாகோ மரடோனா, லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றவர்களின் சாதனைகளை முறியடித்ததோடு, தற்போது பீலேவின் 60 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.