Representative Image.
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், போட்டிகளில் கலந்து கொள்ளும் மற்றும் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகக்கோப்பையை போலவே, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் வரும் 20 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
முதல்முறையாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் போட்டிகள் நடக்கும் நிலையில், இதற்காக பல கோடிகள் செலவு செய்து மிக பிரம்மாண்டமான முறையில் கத்தார் ஏற்பாடுகளை செய்துள்ளது. பிபா கால்பந்து போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில், முதல்முறையாக உலகக்கோப்பை கால்பந்தில் கத்தார் அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், பிபா உலகக்கோப்பையில் கலந்து கொள்ளும் அணிகள் மற்றும் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத் தொகை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, உலகக் கோப்பையை வெல்லும் சாம்பியன் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.342 கோடி பரிசாக வழங்கப்படும். மேலும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடி வழங்கப்பட உள்ளது.
மேலும் அரையிறுதி வரை முன்னேறி மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.219 கோடி மற்றும் ரூ.203 கோடி கிடைக்கும். இதுதவிர கால் இறுதி வரை முன்னேறி வெளியேறிய அணிகளுக்கு தலா ரூ.138 கோடியும், இரண்டாவது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றிலேயே வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
2022 பிபா உலகக்கோப்பை தொடரின் மொத்த பரிசு தொகை மட்டு ரூ.3,586 கோடியாகும். இது கடந்த 2018 இல் ரஷ்யாவில் நடந்த கால்பந்து போட்டியில் வழங்கப்பட்ட தொகையை விட ரூ.328 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.