அமெரிக்கா வீரர் புலிசிக் அசத்தல் ஆட்டம்.. ஈரான் அணியின் போராட்டத்திற்கு முடிவு!!

FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை போட்டியில் குரூப்-பி பிரிவில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் சுற்று 32இல் தங்கள் கடைசி போட்டியை அல் துமாமா மைதானத்தில் விளையாடினார்கள். உலக கால்பந்து தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா அணி இந்த உலகக்கோப்பையில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் டிரா அடைந்து 2-புள்ளிகளுடன் இருந்தது.
அதே பிரிவில் உலக கால்பந்து தரவரிசையில் 20-வது இடத்தில் இருக்கும் ஈரான் அணி ஒரு போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 3 புள்ளிகளுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த போட்டியின் வெல்லும் அணியே உலகக்கோப்பையில் அடுத்த நிலைக்குச் செல்லும் என்ற வகையில் போட்டி தொடங்கியது. இந்த போட்டியின் வெற்றி தான் தங்கள் அணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதை நன்கு உணர்ந்து இரு அணி வீரர்களும் போட்டியில் முழுவீச்சில் விளையாடினார்கள்.
இந்நிலையில் அமெரிக்கா அணி வீரர் கிறிஸ்டியன் புலிசிக் ஆட்டத்தின் போக்கை மாற்றி போட்டியின் 38-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து அமெரிக்க அணியை முன்னிலை பெறச் செய்தார். முதல் பாதியின் முடிவில் ஈரான் அணி சார்பில் எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில் அமெரிக்கா அணி தொடர்ந்து முன்னிலை வகித்தது.
போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியதும், இரு அணி வீரர்களும் தொடர்ந்து தங்கள் முழுப்பங்களிப்புடன் ஆட்டத்தை விளையாடினார்கள். ஈரான் அணியின் வீரர்கள் மெஹ்தி தரேமி மற்றும் கோலிசாதே கோலுக்கான எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
அமெரிக்க அணியின் அடுத்த கோலுக்கான வாய்ப்பும் எடுபடவில்லை. இறுதியாகப் போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி ஈரான் அணியை வென்றது. அமெரிக்கா வீரர் கிறிஸ்டியன் புலிசிக்கின் ஒரு கோல் அவரது அணியை உலகக்கோப்பையின் அடுத்த சுற்றுக்கு அனுப்பியுள்ளது என்று கூறினால் மிகையில்லை.
ஈரான் அணியின் போராட்டம் முடிவடைந்து, உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.