FIFA World Cup 2022 : போராடிய குரோஷியா.. சளைக்காத மொராக்கோ.. கடைசியில் வென்றது யார்?

FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடர் நடந்து வரும் நிலையில், முதல் போட்டியில் "குரூப்-எப்" பிரிவில் இருக்கும் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் அல்-பேட் மைதானத்தில் விளையாடின.
இந்த போட்டியில் கடந்த 2018 உலகக்கோப்பையின் ரன்னர் அப்பான குரோஷியா அணியும் அதே தொடரில் நடந்த போட்டிகளில் பெரிய அணிகளுக்கு பலமான போட்டியை கொடுத்த மொராக்கோ அணியும் மோதியதால் இந்த போட்டி ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கு உள்ளானது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் பேசிய குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிக், நாங்கள் எங்கள் பழைய வெற்றிகளை பின்னால் வைத்துவிட்டு புதிய பொழிவுடன் இளம் வீரர்களுடன் இந்த போட்டியை எதிர்கொள்ள உள்ளோம் என்றார்.
குரோஷியா மற்றும் மொராக்கோ பலப்பரீட்சை:
இந்த போட்டி ஆரம்பித்த முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி முழுவீச்சில் விளையாடினார்கள். குரோஷியா அணி வீரர்களின் ஆட்டத்திற்கு சமமாக மொராக்கோ அணி வீரர்கள் தங்கள் எதிர் ஆட்டத்தை காட்டினார்கள்.
குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிக் கோலுக்காக பலவகையில் முயன்றும் மொராக்கோ அணியின் சிறப்பான ஆட்டத்தினால் போட்டியின் பாதி நேரம் வரை ஒரு கோல் கூட குரோஷியா அணி வீரர்களால் அடிக்கமுடியவில்லை. இரண்டாவது பாதி தொடங்கியது முதல் குரோஷியா அணி வீரர்கள் தங்களால் முடிந்தவரை கோல் அடிக்கும் வாய்ப்பை நோக்கி விளையாடினார்கள்.
இருந்தும் மொராக்கோ அணியின் சிறந்த ஆட்டத்தினால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. கடைசியாக இந்த போட்டியும் இரு அணிகளும் இறுதிவரை கோல் ஏதும் அடிக்காத நிலையில் போட்டி டிராவாக முடிந்தது.
குரோஷியாவின் எண்ணத்தை தகர்த்த மொராக்கோ:
குரோஷியா அணி இந்த போட்டியில் வென்று குரூப் -F புள்ளிபட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை, தங்களின் சிறப்பான ஆட்டத்தினால் மொராக்கோ முறியடித்தது. எனவே இருஅணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு இந்த போட்டியும் டிரா பிரிவில் இணைந்தது.
மொராக்கோ அணியும் எந்த கோலும் அடிக்காத போதிலும், சிறந்த அணியான குரோஷியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பை அரங்கில் தங்கள் திறமையை நிலை நிறுத்தியது. இதனால் மைதானத்தில் சோகமான குரோஷியா அணி ரசிகர்களையும், மகிழ்ச்சியான மொராக்கோ அணி ரசிகர்களையும் காண முடிந்தது.