FIFA World Cup 2022 : கலவரமான காலிறுதி போட்டி.. இறுதிவரை திக்திக்.. நெதர்லாந்தை வீழ்த்தியது அர்ஜென்டினா!!

FIFA World Cup 2022 : உலகக்கோப்பை 2022 கால்பந்து ஆட்டத்தின் இரண்டாவது காலிறுதி ஆட்டம் லுசைல் மைதானத்தில் நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையில் நடந்தது.
முதல் காலிறுதி போட்டியில் அனைவரையும் வியக்க வைக்கும் விதமாக குரோஷியா அணி பிரேசில் அணியை தோற்க்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி தொடங்கியதும் முழுவீச்சில் செயல்பட்ட அர்ஜென்டினா அணி வீரர்கள் தங்கள் அணியின் முதல் கோலுக்கான வாய்ப்பை
தேடினார்கள். இந்நிலையில், போட்டியின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்சி சரியாக பாஸ் செய்த பந்தை துரிதமாக கோலாக மாற்றினார் அர்ஜென்டினா வீரர் நஹுவேல் மோலினா.
இதனால் முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது அர்ஜென்டினா அணி. அடுத்ததாக தொடங்கிய போட்டியின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து அணி வீரர்கள் தங்கள் அணிக்கான கோலை பதிவு செய்ய முயன்றார்கள்.
ஆனால் மாறாக போட்டியின் 73-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனாலிட்டி வாய்ப்பை மிகமும் எளிதாக கோலாக மாற்றினார் அந்த அணியின் நாயகன் லியோனல் மெஸ்சி. இந்நிலையில் 2-0 என்ற கோல் கணக்கில் போட்டியின் வெற்றிக்கு அருகில் இருந்தது அர்ஜென்டினா அணி.
பிறகு போட்டியில் தொடர்ந்து முழு பங்களிப்பை அளித்த நெதர்லாந்து அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக போட்டியின் 83-வது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் வெக்ஹார்ஸ்ட் ஒரு கோலை அடித்தார். மேலும் அடுத்த சில நிமிடங்களிலேயே மற்றும் ஒரு கோலை பதிவு செய்து வூட் வெகோர்ஸ்ட் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதனால் இறுதிவரை சென்ற ஆட்டத்தில் மேலும் எந்த கோலும் பதிவாகாமல் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இந்த போட்டியின் முடிவை அறிய அடுத்தாக பெனாலிட்டி ஷூட்அவுட் முறைக்கு தயாரானார்கள் இரு அணிவீரர்களும். முதல் வாய்ப்பில் களமிறங்கிய நெதர்லாந்து அணி வீரர் வான் டிஜ்க் அடித்த பந்தை அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்டினெஸ் தடுத்தார்.
ஆனால் அர்ஜென்டினா அணி கேப்டன் தனது அணியின் முதல் பெனாலிட்டி கோலை பதிவு செய்தார். அடுத்தாக வந்த நெதர்லாந்து அணி வீரர் ஸ்டீவன் பெர்குயிஸ் அடித்த பந்தையும் எமி மார்டினெஸ் தடுத்து அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தார்.
பிறகு வந்த அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேட்ஸ் இரண்டாவது பெனாலிட்டி வாய்ப்பில் ஒரு கோல் அடித்து 2-0 என்று தன் அணியை முன்னிலை பெறச் செய்தார். நெதர்லாந்து அணியின் முதல் பெனாலிட்டி கோலை டீன் கூப்மெய்னர்ஸ் பதிவு செய்தார்.
அவரை தொடந்து அர்ஜென்டினா வீரர் மான்டீல் அடித்த கோல் மூலம் 3-1 என்று அர்ஜென்டினா தொடர்ந்து முன்னிலை பெற்றது. மேலும் ஆட்டத்தை விறுவிறுப்பாக மாற்றும் வகையில் நெதர்லாந்து அணி வீரர் வூட் வெகோர்ஸ்ட் ஒரு கோலை அடித்ததன் மூலம் 3-2 என்று கோல் எண்ணிக்கை மாறியது.
அதன் பிறகு அர்ஜென்டினா அணியின் சார்பில் பெனாலிட்டி அடிக்க வந்த என்ஸோ பெர்னாண்டஸ் அதனை கோலாக மாற்ற தவறினர். இதனால் 3-2 என்றே கோல் நிலை தொடர்ந்தது. நெதர்லாந்து அணி வீரர் லுக் டி ஜாங் ஒரு கோலை அடித்தார் இதன்மூலம் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் இருந்தது.
இந்த போட்டியின் முடிவையும் அர்ஜென்டினா அணியின் வெற்றியையும் முடிவு செய்யும் கோலை அடிக்க வந்த அர்ஜென்டினா வீரர் லாட்டாரோ மார்டினெஸ் சிறப்பாக கோல் அடித்து தனது அணியை வெற்றியடையச் செய்தார். இதன்மூலம் 4-3 என்ற கோலக்கணக்கில் அர்ஜென்டினா அணி நெதர்லாந்து அணியை தோற்கடித்தது.
இந்த பிபா உலகக்கோப்பை 2022-ல் அரைஇறுதிக்கு செல்லும் இரண்டாவது அணியாக அர்ஜென்டினா தேர்வானது. மேலும் அரை இறுதியில் குரோஷியா அணியை சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.