இங்கிலாந்து அணி அபாரம்.. வெளியேறியது வேல்ஸ் அணி!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 30, 2022 & 12:57 [IST]

Share

FIFA World Cup 2022 : கால்பந்து உலகக்கோப்பை 2022 இன்றைய போட்டியில் குரூப்-பி பிரிவில் இருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் அல் ரய்யானில் உள்ள அஹ்மத் பின் அலி மைதானத்தில்  மோதினார்கள். இதுவரை விளையாடிய போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் குரூப்-பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. 

வேல்ஸ் அணி இதுவரை ஒரு போட்டியில் தோல்வியும் மற்றொரு போட்டியில் டிரா அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் கட்டாய வெற்றியை  நோக்கி விளையாட வேண்டும்  என்றால் மிகையில்லை.

இந்த போட்டியின் முக்கியத்துவத்தை அறிந்த வேல்ஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராகத்  தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இங்கிலாந்து அணியின்  மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட் கோலுக்கான முயற்சியை  வேல்ஸ் கோல்கீப்பர் டேனி வார்டு முறியடித்தார்.

மேலும் இங்கிலாந்து அணி வீரர்களின் பல முயற்சிக்கு வேல்ஸ் அணி வீரர்கள் பதில் ஆட்டத்தின் மூலம் எதிர்கொண்டதால் ,இந்த போட்டியின் முதல் பாதி கோல் ஏதும் பதிவாகாமலே முடிவடைந்தது.

போட்டியின் இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட  இங்கிலாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் போட்டியின்  49-வது நிமிடத்தில் பில் போடன் உதவியுடன் மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட் இங்கிலாந்து அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து போட்டியின் 51-வது நிமிடத்தில் பில் போடன் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இங்கிலாந்து அணியின் தொடர் கோல்களால் கலங்கிய வேல்ஸ் அணி பதில் கோல் ஏதும் அடிக்காமலே ஆட்டம் நகர்ந்தது. இந்நிலையில், போட்டியின் 67-வது நிமிடத்தில்  மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட் 
மறுபடியும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம்  இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியானது. எனவே போட்டியின் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று சூப்பர்-16 சுற்றுக்கு முன்னேறியது.