Representative Image.
FIFA World Cup 2022 : கால்பந்து உலகக்கோப்பை அரங்கில் அடுத்த சுற்றான சூப்பர்-16 சுற்றுக்கு இதுவரை பிரான்ஸ், பிரேசில் போர்ச்சுகல் அணிகள் தேர்வாகிச் சென்றுள்ள நிலையில் குரூப்-எ பிரிவில் கத்தார் அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நிலையில் எந்த அணிகள் அடுத்த நிலைக்குச் செல்லும் என்பது இந்த போட்டியில் முடிவாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈக்வடார் அணி இந்த உலகக்கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஒரு போட்டியில் வெற்றியையும் மற்றொரு போட்டியில் டிராவிலும் முடித்துள்ளது. ஈக்வடார் அணியின் நட்சத்திர வீரரான என்னர் வலென்சியா இரண்டு போட்டிகளில் 3 கோல்களை அடித்து தனது அணியை இதுவரை எடுத்து வந்துள்ளார்,
அதேபோல் செனகல் அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இதனால் இந்த போட்டியின் முக்கியத்துவத்தை அறிந்து ஈக்வடார் மற்றும் செனகல் அணிகள் கலீபா சர்வதேச மைதானத்தில் ஆட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த போட்டியின் முக்கியத்துவத்தை அறிந்த இருஅணிகளும் தொடக்கம் முதலே முழுவீச்சில் தங்கள் அணிக்கான கோல் வாய்ப்பை நோக்கி விளையாடினார்கள். ஈக்வடார் அணிவீரர் வலென்சியா தனது அணிக்குக் கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பை சரியாகக் கோலாக மாற்றத் தவறினார்.
ஆனால் செனகல் அணி வீரர் இஸ்மாயிலா சார் தனக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார். இதன் மூலம் போட்டியின் முதல் பாதி முடிவில் செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கிய நிலையில், சிறப்பாக விளையாடிய ஈக்வடார் அணிக்கு பலனாகப் போட்டியின் 67-வது நிமிடத்தில் கார்னர் கிக் வாய்ப்பை சரியாக மாற்றி மொய்சஸ் கைசெடோ ஈக்வடார் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமமாக சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட செனகல் அணி கேப்டன் கலிடோ போட்டியின் 70-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து தன் அணியை முன்னிலை பெறச் செய்தார்.
போட்டியின் இறுதிவரை ஈக்வடார் அணியின் முயற்சி ஏதும் பலிக்காத நிலையில் 2-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் சூப்பர்-16 சுற்றுக்கும் முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.