FIFA World Cup 2022 : பரபரப்பான காலிறுதி.. பந்தாடிய குரோஷியா.. வெளியேறியது பிரேசில் அணி!!

FIFA World Cup 2022 : பிபா 2022 உலகக்கோப்பை அரங்கில் அடுத்தகட்ட முக்கிய போட்டியான காலிறுதியில் குரோஷியா மற்றும் பிரேசில் அணிகள் எஜூகேஷன் சிட்டி மைதானத்தில் மோதினார்கள். இந்த போட்டியின் தொடக்கத்திற்கு முன்னர் கால்பந்து ரசிகர்கள் இடத்தில் இருவேரான கருத்துகள் நிலவின. உலகக்கோப்பையின் முக்கிய அணியான பிரேசில் எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே வேளையில் கடந்த உலகக்கோப்பை போட்டியில் இறுதிவரை சென்ற குரோஷியா அணி, இந்த போட்டியை வெல்லும் முனைப்பில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த போட்டி தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பிரேசில் அணி சார்பில் நெய்மர்,வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் ஒரு பக்கம் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் அதற்கு இணையாக குரோஷியா அணி வீரர்கள் லூகா மோட்ரிக், பசலிக் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் முதல் பாதி முடியும் வரை இரு அணிகள் சார்பில் எந்த கோலும் பதிவாகவில்லை.
அடுத்தாக போட்டியின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணியின் மூலம் கோலுக்கு அடிக்கப்பட்ட பந்தைச் சிறந்த முறையில் தடுத்து குரோஷியா அணியின் கோல் கீப்பர் டொமினிக் லிவகோவிச் தனது அணிக்கு அரணாக விளங்கினார். போட்டியின் 90-நிமிடம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் மேலும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் மிகுந்த நேரமாக நிலவிய மௌனத்தை உடைக்கும் வகையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தனது துரித ஆட்டத்தின் மூலம் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். கால்பந்து அரங்கம் முழுவதும் பிரேசில் அணி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
நெய்மர் அடித்த இந்த கோலின் மூலம் போட்டியில் தனது அணியை முன்னிலை பெறச்செய்த நெய்மர், பிரேசில் அணியின் ஜாம்பவான் பீலே தனது அணிக்காக அடித்த 77 கோல் சாதனையைச் சமன் செய்தார். ஆனால் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
குரோஷியா அணி வீரர் புருனோ பெட்கோவிச் யாரும் எதிர்பாராத விதமாகப் போட்டியின் இறுதியில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். இதனால் போட்டியின் முடிவை அறிய ஆட்டம் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையை நோக்கி நகர்ந்தது.
இந்த பெனாலிட்டி ஷூட்-அவுட் குரோஷியா அணி சார்பில் நிகோலா விளாசிக், மிஸ்லாவ் ஓர்சிக், லோவ்ரோ மேஜர் மற்றும் லூகா மோட்ரிக் தலா ஒரு கோல்களை அடித்து அரங்கத்தை அதிர வைத்தனர்.
இந்நிலையில் குரோஷியா அணியின் அரணாக இருந்த கோல் கீப்பர் டொமினிக் லிவகோவிச் பிரேசில் அணி சார்பில் அடிக்கப்பட்ட முதல் பெனாலிட்டியை தடுத்தார்,அடுத்தாக பிரேசில் அணி சார்பில் இரு கோல்கள் பதிவானது.அதனைத் தொடர்ந்து கோல் அடிக்க வந்த பிரேசில் வீரர் மார்கினோஸ் கோல் போஸ்டின் மீது அடித்து வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் பெனாலிட்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி குரோஷியா அணியிடம் தோல்வியடைந்து பிபா உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது. இறுதிவரை போராடிய குரோஷியா அணி உலகத்தின் நம்பர்-1 அணியான பிரேசிலைத் தோற்கடித்து உலகக்கோப்பை அரங்கில் சிறப்பான சம்பவத்தைப் பதிவு செய்தது.
மேலும் பிபா உலகக்கோப்பை 2022 அரையிறுதிக்குமுதல் அணியாக தகுதி பெற்றது குரோஷியா.