Representative Image.
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022-யில் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் இரண்டாவது போட்டியை விளையாடி வரும் நிலையில், நேற்றைய போட்டியில் அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.
அர்ஜென்டினா அணி தனது முதல் போட்டியில் தனது பிரிவில் இருக்கும் சவூதி அரேபியா அணியிடம் தோல்வியடைந்த நிலையில், கட்டாய வெற்றியை நோக்கி லுசைல் மைதானத்தில் மெக்சிகோ அணியை எதிர்த்துக் களமிறங்கியது. மேலும் மெக்சிகோ அணி தனது முதல் போட்டியை போலந்து அணியுடன் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
உலக கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா அணி தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தது கால்பந்து உலகக்கோப்பை அரங்கில் அதிர்ச்சியை உண்டாக்கியது. எனவே அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ இருஅணிகளும் தங்கள் முதல் வெற்றிக்காக முழுவீச்சில் விளையாடின.
அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு வரும் பந்தைத் தடுக்கும் முனைப்பில் தீவிரமாக மெக்சிகோ அணி வீரர்கள் விளையாடினார்கள். இதனால் போட்டியின் முதல் பாதிநேர முடிவுவரை கோல் ஏதும் பதிவாகாமலேயே ஆட்டம் நகர்ந்தது.
இந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்தவுடன் தங்கள் முழுத்திறமையுடன் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடியது அர்ஜென்டினா அணி. இதனால் போட்டியின் 64-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோல் அடித்தார் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. இது மைதானத்திலிருந்த அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணியின் இளம் வீரரான என்ஸோ பெர்னாண்டஸ் ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். இதற்கு மெஸ்ஸி அஸிஸ்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் இறுதிவரை முயன்றும் மெக்சிகோ வீரர்களால் கோல் ஏதும் அடிக்க முடியாததால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தங்கள் பழைய நிலைக்கு அர்ஜென்டினா அணி திரும்பியுள்ளது. மேலும் உலகக்கோப்பையின் அடுத்து சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.