பிபா 2022 உலகக்கோப்பை :தொடரின் இறுதியில் "முக்கிய நான்கு விருதுகள் " ..! வென்று அசத்திய அர்ஜென்டினா நாயகர்கள்..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 19, 2022 & 13:44 [IST]

Share

உலகக்கோப்பை 2022 கால்பந்து தொடர் மிகவும் கோலாகலமாக கத்தாரில் தொடங்கப்பட்டு இறுதிக்குப் போட்டிக்கு அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் முன்னேறின. 

இதனை அடுத்து மிகவும் மிரட்டலாக நடந்த இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனாலிட்டி முறையில் தோற்கடித்து 3-வது முறையாக அர்ஜென்டினா அணி 36-வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தைப் பெற்று அசத்தியது.

மேலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய அர்ஜென்டினா அணி முதல் இடத்திற்கான 347 கோடியையும், இரண்டாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணி 248 கோடியையும் பரிசுத்தொகையாகப் பெற்றன.

இந்த உலகக்கோப்பையில்  புதிய விதமாகப் பல முன்னணி அணிகள் தோல்வியைத் தழுவி முதலிலேயே தொடரை விட்டு வெளியேறினார்கள். இந்த தொடரின் முடிவில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகப் பங்களித்து தங்கள் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில் பிபா 2022 தொடரில் விருதுகளைத் தட்டிச் சென்ற வீரர்கள் குறித்த விவரம்.

1.கோல்டன் பூட் விருது 2022:

உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்களைப் பதிவு செய்யும்  வீரருக்குத் தொடரின் இறுதியில் கோல்டன் பூட் விருது வழங்கப்படும். இந்நிலையில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணிக்காக ஹாட்ரிக் கோல்களை அடித்து தனது அணியின்  வெற்றிக்காகப் போராடிய இளம்வீரர் கைலியன் எம்பாப்பே இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தித் தான் விளையாடிய 7-போட்டிகளில் 8-கோல்களை அடித்து கோல்டன் பூட் விருதை தட்டிச் சென்றார்.

மேலும் இறுதிப் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இவரின் அணி வெற்றி பெறவில்லை என்றாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கப்பட்டதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் நிலவுகிறது.

2.கோல்டன் பால் விருது 2022:

ஒரு தொடரில் முழுவதுமாக தன் திறமையின் மூலம் தனது அணியின்  வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வீரருக்கு இந்த கோல்டன் பால் விருது வழங்கப்படும். அந்த வகையில் உலகக்கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியை 2022- உலகக்கோப்பையின் தொடர் நாயகனாக அறிவித்து "கோல்டன் பால் விருது" வழங்கப்பட்டது. 

இந்த தொடரில் மெஸ்சி தான் விளையாடிய 7-போட்டிகளில் 7-கோல்களை அடித்துள்ளார். மேலும் 3-கோல்களை தனது அணி வீரர்கள் அடிக்க உதவியுள்ளார். இவரின் துரித முயற்சியால் தான் அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது என்பதால் இவருக்கு கோல்டன் பால் விருது வழங்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

3.கோல்டன் க்ளோவ் விருது 2022:

ஒரு போட்டியில் தனது அணியின் வெற்றியை உறுதி செய்வதில் அந்த அணியின் கோல்கீப்பருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்நிலையில் ஒரு தொடரில் அதிக கோல்களைத் தடுத்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்யும் கோல் கீப்பருக்கு "கோல்டன் க்ளோவ் விருது" வழங்கப்படும்.

அந்த வகையில் 2022-உலகக்கோப்பையில் தனது அணிக்காகச்  சிறப்பாகப் பங்களித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸ் கோல்டன் க்ளோவ் விருதைப் பெற்றார்.

4.பிபா இளம் வீரர் விருது 2022:

ஒரு தொடரில் சிறப்பாக விளையாடி தனது அணியின் வெற்றிக்காகப் பலவகையில் பங்காற்றிய இளம் வீரருக்கு "பிபா இளம் வீரர் விருது" வழங்கப்படும். அந்த வகையில் அர்ஜென்டினாவின் இளம் வீரரான 

என்ஸோ பெர்னாண்டஸ் 2022 உலகக்கோப்பையின் பிபா இளம் வீரர் விருதைப் பெற்றார். மேலும் இந்த தொடரில் மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் இவர் அடித்த கோல் அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது குறிப்பிடத்தக்கது.