பிபா 2022: அர்ஜென்டினாவின் அபார ஆட்டத்தினால் கலைந்தது குரோஷியாவின் உலகக்கோப்பை கனவு..!

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: [IST]

Share

பிபா உலகக்கோப்பை 2022 முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுசைல் மைதானத்தில் விளையாடினார்கள். இதுவரை இந்த உலகக்கோப்பையில்  இரு அணிகளும்  மிரட்டலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார்கள். எனவே இந்த போட்டியில்  யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்கள் இடையே அதிகமாகவே இருந்தது.

இந்த உலகக்கோப்பை தான் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்பதால் தனது முழுப்பங்களிப்பையும் வெளிப்படுத்துவார் என்றும், அதே சமயத்தில் குரோஷியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிக் கண்டிப்பாகத் தனது அணியின் வெற்றிக்காக முழுமையாகச் செயல்படுவார் என்பதாலும் இரு அணிகளுக்கு இடையே சிறந்த போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த போட்டி தொடங்கியவுடன் முழுவீச்சில் செயல்பட்ட அர்ஜென்டினா வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக குரோஷியா அணியின் கோல்கீப்பர் டொமினிக் லிவகோவிச் மற்றும் அர்ஜென்டினா அணியின் ஜூலியன் அல்வாரெஸ் மீது மோதி கீழே விழச் செய்ததின் விளைவாகப் போட்டியின் 34-நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்குக் கொடுக்கப்பட்ட பெனாலிட்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய நட்சத்திர வீரர் மெஸ்சி அதனைக்  கோலாக மாற்றினார். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் தனது அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்தார். மேலும் இந்த உலகக்கோப்பை 2022-ல் மெஸ்சியின் ஐந்தாவது கோல் என்பது குறிப்பிடத்தக்கது.  

அதன்பிறகு அவரை தொடர்ந்து போட்டியின் 39-நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் மற்றுமொரு கோலை அடித்தார். இதன் மூலம் போட்டியின் முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலையிலிருந்தது. அடுத்தாக போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியதும் குரோஷியா அணி வீரர்கள் சார்பில் தங்கள் அணியின் கோலுக்காகப் பலவகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் போட்டியின் 69-வது நிமிடத்தில் மெஸ்சி தனது அணியின் வீரர் ஜூலியன் அல்வாரெஸ் பந்தை பாஸ் செய்து கோலுக்கான வாய்ப்பை உருவாக்கித் தந்தார். அதனைச் சரியாகப் பயன்படுத்திய அல்வாரெஸ் இந்த போட்டியில் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினாவின் வெற்றி உறுதியானது. இறுதிவரை முயன்றும் குரோஷியா அணி சார்பில் எந்த கோலும் பதிவாகாத நிலையில் 3-0 என்ற கோல் கணக்கில்  அர்ஜென்டினா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் தோல்வியின் மூலம்  குரோஷியா அணியின் சிறப்பான உலகக்கோப்பை பயணம் முடிவடைந்தது. மேலும் தங்கள் அசாத்திய ஆட்டத்தின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா அணி இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் லுசைல் மைதானத்தில்  மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.