அவசரப்பட்டு ட்வீட் போட்டதால் வந்த வினை.. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு அரசு நோட்டிஸ்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 23, 2022 & 14:49 [IST]

Share

கோவாவில் புதிய தொழில் தொடங்கிய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், மாநில அரசின் விதிகளை மீறியுள்ளதால், அரசின் நடவடிக்கையை எதிர்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டில் இவர் ஒரு ஜாம்பவான் :

கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தை தனது சிறப்பான பங்களிப்பினால் பிடித்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இடதுகை ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்தவர் ஆவார்.

குறிப்பாக டி-20 முதல் உலகக்கோப்பையில் இவர் அடித்த ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் தான் அந்த புதிய கிரிக்கெட் தொடருக்கு முக்கிய விளம்பரமாக அமைந்தது என்றே  கூறலாம். மேலும் 2011-இல் இந்திய அணி  உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இதைபோல் கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

கிரிக்கெட்டிற்கு பிறகு புதியபயணம் :

யுவராஜ் சிங் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு 2019-ஆம் ஆண்டு விடைகொடுத்தார். அதன் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக விளம்பரங்களில் நடிப்பது உண்டு. அந்த வரிசையில் இவரும் பல விளம்பரப் படங்களில் நடித்தார். அதன் பிறகு  பலவிதமான தொழில்களை செய்து வந்தார். 

இடையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த யுவராஜ் சிங், அதில் இருந்து மீண்ட தனது வாழ்க்கை பயணத்தை ஒரு புத்தகமாக ( “The Test of My Life: From Cricket to Cancer and Back”)
வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய முயற்சியால் புதிய பிரச்சனை :

யுவராஜ் சிங் தனது பங்களிப்பை பலவிதமான தொழில்களில் காட்டிவந்தார். அந்த வரிசையில் சொகுசு விடுதிகளை வாடகைக்கு விடும் புதிய தொழிலை ஆரம்பித்தார். கோவாவில்  தனது சொந்த சொகுசு விடுதியை வாடகைக்கு விட எண்ணிய அவர், அதை பற்றிய விளம்பரத்தை, தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 

இதில் என்ன பிரச்சனை என்றால் கோவாவின் அரசு விதிகளின்படி கோவாவில் ஒரு விடுதி  வாடகைக்கு விடும் தொழிலைத்  தொடங்கினால், அதற்கு அந்த அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்த விதிமுறைகளை எதையுமே அவர் பின்பற்றாததால், கோவா சுற்றுலாத்துறை சார்பில் நேரில் விளக்கம் தரவேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அவரது செயலுக்கான சரியான விளக்கம் தரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது.