Vijay Hazare Trophy 2022 : தமிழகத்தின் சாதனையை கிண்டலடிக்க மும்பை கிரிக்கெட் வல்லுநர்.. தெறிக்கவிட்ட தமிழக வீரர்கள்!!

Vijay Hazare Trophy 2022 : விஜய் ஹசாரே டிராபியில் தமிழக அணி வரலாற்றுச் சாதனை படைத்த நிலையில், அதை கண்டு பொறாமையில் தமிழகத்தை நக்கலடித்த மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வல்லுனரை அஸ்வினும், அபினவ் முகுந்தும் சம்பவம் செய்து விட்டனர்.
தமிழக அணி வரலாற்றுச் சாதனை
நடந்து வரும் 50 ஓவர் உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில் தமிழக அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 50 ஓவர் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 506 ரன்கள் எடுத்தன.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சாய் சுதர்சன் 154 ரன்கள் எடுத்த நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நாராயண் ஜெகதீசன் அபாரமாக விளையாடி 277 ரன்கள் குவித்தார். உலக அளவில் 50 ஓவர் கிரிக்கெட்டில் இது தான் ஒரு தனி நபர் ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.
தமிழக அணி 506 ரன்கள் எடுத்ததன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் உலக அளவில் 500 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையையும் தமிழக அணி பெற்றது. மேலும் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையையும் தமிழக வீரர்கள் பெற்றனர்.
வயிற்றெரிச்சல் பதிவை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வல்லுநர்
தமிழக அணியின் சாதனையும், தமிழக வீரர்களின் சாதனையும் உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறிய நிலையில், இதைக் கண்டு காண்டான மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வல்லுநர் மஹாராண்ட் வைங்காங்கர், தமிழக அணி ரஞ்சி கோப்பை வரலாற்றில் 2 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது என்று கிண்டலடித்தார்.
தமிழக வீரர்கள் பதிலடி
இதற்கு முதல் ஆளாக பதிலடி கொடுத்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த், விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் 5 முறை தமிழக அணி கோப்பையை வென்றுள்ளது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா என்பது போல் கேட்க, அதற்கு மீண்டும் மஹாராண்ட் தான் இந்தியாவின் சாம்பியன்ஷிப் குறித்து பேசுவதாக கூறி சீண்டினார்.
இந்த முறை அபினவ் முகுந்திற்கு பதிலாக தமிழக கிரிக்கெட் ரசிகர், அப்ப விஜய் ஹசாரே போட்டி என்ன செவ்வாய் கிரகத்திலா நடக்கிறது எனக் கூறி தெறிக்கவிட்டார். இதற்கிடையே அஸ்வினும் இந்த கோதாவில் குதித்தார்.
அஸ்வின், "ரஞ்சிக்கோப்பையில் 38 முறை கோப்பையை வென்ற மும்பை அணி மீது தனக்கு மரியாதை உள்ளது. ஆனால் விஜய் ஹசாரே தொடரின்போது ரஞ்சி போட்டி குறித்து ஏன் பேச வேண்டும். நாராயண் ஜெகதீசன் சாதனை குறித்த மகிழ்ச்சியில் ஏன் மண்ணை அள்ளி தூற்றுகிறீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கடந்து செல்லுங்கள்.
இந்த விஷயத்தில் அபினவ் முகுந்த் கொடுத்த பதிலடி எனக்கு மிகவும் பிடித்துள்ளது." என சரமாரியாக கொட்டித் தீர்த்துவிட்டார்.